தினசரி யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு $13.91 பில்லியனாக அதிகரிப்பு

2 mins read
92cc55b1-a87f-47bd-b1fc-720f9fa57eab
மின்னிலக்கப் பரிவர்த்தனைத் தளமான யுபிஐ. - படம்: இணையம்

புதுடெல்லி: இந்தியாவின் யுபிஐ எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தளத்தில் தினந்தோறும் சராசரியாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளின் மதிப்பு அக்டோபரில் 940 பில்லியன் ரூபாய்க்கு (13.91 பில்லியன் வெள்ளி) அதிகரித்துள்ளதாக என்டிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்திய தேசிய கட்டணங்கள் அமைப்பு (என்பிசிஐ) இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இம்மாதம் நிறைவடைய இன்னும் ஒரு வாரம் எஞ்சியிருக்கும் நிலையில் மாதந்தோறும் பதிவாகும் யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தைத் தொடும் விளிம்பில் உள்ளது.

தீபாவளிக் காலத்தில் பலர் அதிகம் செலவு செய்வதாலும் அண்மையில் பொருள், சேவை வரிக் (ஜிஎஸ்டி) கழிவு அறிவிக்கப்பட்டதாலும் தினசரி யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் மாத அடிப்படையில் யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு ஆக அதிக அளவில் அதிகரித்த நிகழ்வுகளில் இம்மாதமும் அடங்கும்.

இந்தியாவில் இடம்பெறும் மின்னிலக்கப் பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட 85 விழுக்காட்டுப் பரிவர்த்தனைகள் யுபிஐ தளத்தின் மூலம் மேற்கொள்ளப்படுபவை. யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவில் அதிகமாகப் பதிவாகி வருகின்றன.

தீபாவளிக்கு முதல் நாள், இதுவரை இல்லாத அளவில் ஒரு நாளில் 740 மில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் பதிவாயின.

அக்டோபரில் தினந்தோறும் சராசரியாக 695 மில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் பதிவாயின. செப்டம்பரில் பதிவான 654 மில்லியனுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கை ஆறு விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்துள்ளது.

யுபிஐ வளர்ச்சிக்குப் பண்டிகைக் காலம் என்றுமே மெருகூட்டும் ஒன்றாக இருந்து வருகிறது.

சென்ற ஆண்டு ஆயுத பூஜை, தீபாவளி இரண்டும் அக்டோபர் மாதம் வந்தன. அதனால் அந்த மாதம் மின்னிலக்கப் பரிவர்த்தனைகள் அதிகரித்தன.

இவ்வாண்டு ஆயுத பூஜை செப்டம்பரில் வந்தது, தீபாவளி இம்மாதம் 20ஆம் தேதி வந்தது. அதனால் மின்னிலக்கப் பரிவர்த்தனைகள் இந்தக் காலகட்டத்தில் மறுபடியும் மேம்பட்டுள்ளன.

பொதுவாக ஒரு மாதத்தின் தொடக்கத்தில் கட்டணத் தளங்களில் ஆக அதிகப் பரிவர்த்தனைகள் இடம்பெறுவது வழக்கம். அந்தக் காலகட்டத்தில் சம்பளம், இஎம்ஐ கட்டணங்களைப் பலர் பெறுவது அதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்