புதுடெல்லி: பௌத்த சமயத் தலைவரான தலாய் லாமாவிற்கு, உலகளாவிய இசைத்துறையின் உச்ச விருதான ‘கிராமி’ விருது வழங்கப்பட்டுள்ளது.
தியானம் குறித்து ஒலி வடிவில் அவர் வெளியிட்ட நூலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
90 வயதாகும் தலாய் லாமா, திபெத்தைச் சேர்ந்தவர். ஆனால், அவர் நாடு கடந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.
திபெத் சீனாவின் அங்கம் என்று பெய்ஜிங் கூறிவரும் நிலையில், திபெத்தின் தன்னாட்சி அதிகாரம் குறித்த தலாய் லாமாவின் பிரசாரங்கள் அவருக்கு உலகளாவிய புகழை ஈட்டித் தந்துள்ளன. 1989ல் அவருக்கு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.
அண்மையில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற்ற கிராமி விருதளிப்பு நிகழ்ச்சியில் அவருக்கான அங்கீகாரம் குறித்து அறிவிக்கப்பட்டது.
தாம் அதைப் பணிவோடும் நன்றியோடும் ஏற்றுக்கொள்வதாக தலாய் லாமா சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். “இது தனிப்பட்ட அங்கீகாரம் என்று நான் கருதவில்லை. அனைவரும் கொண்டுள்ள உலகளாவிய பொறுப்புணர்விற்கான அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன்,” என்றார் அவர்.
அமைதி, கருணை, சுற்றுச்சூழல் மீதான அக்கறை, மானுட ஒற்றுமை ஆகிய பண்புகள் இவ்வுலகில் வாழும் எட்டு பில்லியன் மனிதர்களின் ஒட்டுமொத்த நலனுக்கு அவசியம் என்று தாம் கருதுவதாக தலாய் லாமா சொன்னார்.
‘தியானம்: தவத்திரு தலாய் லாமாவின் சிந்தனைகள்’ (Meditation: Reflections Of His Holiness The Dalai Lama) எனும் அவரது நூலுக்கான ‘கிராமி’ விருதைப் புகழ்பெற்ற இசைக்கலைஞர் ரூஃபஸ் வெயின்ரைட் (Rufus Wainwright), தலாய் லாமா சார்பில் பெற்றுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
1959ஆம் ஆண்டு, திபெத் தலைநகர் லாசாவில் சீன ராணுவம் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போது 23 வயது நிரம்பிய இளையரான தலாய் லாமா உயிருக்கு அஞ்சித் தப்பியோடி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன் பிறகு அவர் திபெத்திற்குச் செல்லவேயில்லை.

