இந்தோனீசியா: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகருக்குச் சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர்க் கப்பலில் 106 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தியதாகக் தொடரப்பட்ட வழக்கில் இந்திய நாட்டவர்கள் ராஜு முத்துக்குமரன், 35 செல்வதுரை தினகரன் 34, கோவிந்தசாமி விமல்கந்தன் 45 ஆகியோர் குற்றவாளி என இந்தோனீசிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஐந்து கிராமுக்கு மேல் எடையுள்ள முதல்தர போதைப் பொருளை இறக்குமதி செய்ய முயன்றதை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) உறுதிப்படுத்திய தஞ்சோங் பாலாய் கரிமுன் மாவட்ட நீதிமன்றம், அந்த இந்தியர்கள் மூவருக்கும் மரண தண்டனை விதிப்பதாக அறிவித்தது.
போதைப்பொருள் தொடர்பான இந்தோனீசியச் சட்டத்தின்கீழ் அம்மூவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
அவர்கள் மூவரும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் ‘எஸ்-பாஸ்‘ வேலை அனுமதி அட்டையில் பணியாற்றி வந்தனர். அவர்களில் முத்துக்குமரனும் விமல்கந்தனும் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்; தினகரன் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இந்த வழக்கு தொடர்பிலான நீதிமன்ற விசாரணை கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து நடைபெற்றுவந்த நிலையில், நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. இவ்வழக்கில் அரசாங்கத் தரப்பில் ஏழு வழக்கறிஞர்கள் முன்னிலையாகினர்.
தீர்ப்பின் விவரத்தைக் கேட்ட இந்திய நாட்டவர்கள் மூவரும் முகத்தில் சலனமின்றி அமர்ந்திருந்தனர்.
இதற்கிடையே, போதைப்பொருள் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள திரு முத்துக்குமரனின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான இறுதிக் கட்ட சிகிச்சை பெற்றுவருகிறார்.
தீர்ப்பு வழங்கிய நாள் வரையிலும் பலமுறை கால அவகாசம் கொடுத்தபோதும் குற்றம் சாட்டப்பட்ட தினகரனும் விமல்கந்தனும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க முன்வரவில்லை என்று நீதிபதிகள் குழு சுட்டியது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அவ்விருவரும் முதலாம் குற்றவாளி முத்துக்குமரனின் பேச்சுக்கு செவிமடுத்ததாகச் சுட்டிய நீதிமன்றம், இதனால் அவர்களுக்கும் மரண தண்டனை விதிப்பதாகக் குறிப்பிட்டது.
அவர்கள் மேல்முறையீடு செய்வார்களா என்பது குறித்த உறுதியான தகவலைத் தர குடும்ப உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர்.
அவர்களுக்காக இவ்வழக்கில் இலவசமாக முன்னிலையான இந்திய வழக்கறிஞர் ஜான்பால், 39, இந்தோனீசியச் சட்டப்படி குற்றவாளிகள் மூவரும் 7 நாள்களுக்குள் நீதிபதிகளிடம் முறையிடலாம் என்றும் 14 நாள்களுக்குள் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்தார்.