அய்ஸ்வால்: ரீமல் புயல் மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலங்களில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு இதுவரை 31 பேர் உயிரிழந்து விட்டனர்.
மிசோரம் மாநிலத்தில் குறைந்தது நான்கு இடங்களில் நிலச்சரிவுகளும் ஓரிடத்தில் பாறைகள் சரிந்து விழுந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளன. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 30ஐ தாண்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அசாம் மாநிலத்தில் கனமழையால் மூன்று பேரும் மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜைந்தியா மலைப்பகுதியில் ஒருவரும் உயிரிழந்து விட்டனர்.
வடகிழக்கு மாநிலங்களில் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதில் மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. பல இடங்களில் மின்சாரமின்றி மக்கள் இருளில் தவிக்கின்றனர். பெரும்பாலான இடங்களில் தொலைத்தொடர்பு, இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.