அந்நிய நேரடி முதலீடுகளுக்கான உச்சவரம்பை உயர்த்த முடிவு

அந்நிய நேரடி முதலீடுகளுக்கான உச்சவரம்பை உயர்த்த முடிவு

2 mins read
ae65770f-4c92-446e-a53c-56a9e80ff924
அமெரிக்கா, சிங்கப்பூர், நெதர்லாந்து, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. - சித்திரிப்புப் படம்: தினமணி
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகளுக்கான உச்சவரம்பு ரூ.15,000 கோடியாக உயர்த்துவது குறித்து அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.

தற்போது இந்த உச்சவரம்பு ரூ.5,000 கோடியாக உள்ளது. இதையடுத்து, புதிய முடிவைச் செயல்படுத்த பொருளியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (CCEA) அனுமதியைப் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்கா, சிங்கப்பூர், நெதர்லாந்து, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன.

ரூ.5,000 கோடிக்கும் குறைவான அந்நிய நேரடி முதலீடு குறித்து சம்பந்தப்பட்ட இந்திய அமைச்சுகளே முடிவெடுக்கின்றன. அதற்கும் அதிகமான முதலீடுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இயங்கும் சிசிஈஏ எனும் உயர்நிலைக்குழு முடிவெடுக்கும். இந்த உச்சவரம்பானது கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் முதல் நடைமுறையில் உள்ளது.

தற்போதைய பணவீக்கம், அனைத்துலக வணிகச் சந்தை உள்ளிட்ட பல அம்சங்களைக் கவனத்தில் கொள்ளும் சூழலில் அந்த உச்சவரம்பை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பொருளியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து அண்மையில் நடைபெற்ற துறை வாரியான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின.

தற்போதுள்ள நடைமுறையின்படி இந்திய அரசின் ஒப்புதலின்கீழ் அந்நிய நேரடி முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய துறைகள் தொடர்பாக அரசும் முழு அனுமதி பெற‌ வேண்டியது கட்டாயமாகும். இந்தியாவுடன் நில எல்லைகளைப் பகிரும் நாடுகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.

கடந்த 2000 ஏப்ரல் முதல் 2026 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்தியா ஏறக்குறைய 1.16 டிரில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
அந்நியச் செலாவணிமுதலீடுஅமெரிக்காபிரிட்டன்ஜப்பான்நெதர்லாந்துசிங்கப்பூர்பொருளியல்