இந்தியாவில் தானிய உற்பத்திச் செறிவால் பழங்கள், காய்கறிகள் உற்பத்தி சரிவு

இந்தியாவில் தானிய உற்பத்திச் செறிவால் பழங்கள், காய்கறிகள் உற்பத்தி சரிவு

படம்: எஸ்பிஎச்

27 Sep 2026 - 6:19 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாகப் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் உற்பத்தி வளர்ச்சி வேகம், அதற்கு முந்தைய பத்தாண்டுகளோடு ஒப்பிடும்போது மந்தமடைந்துள்ளது.

நாட்டின் வேளாண் கொள்கைகள் தொடர்ந்து தானியங்களை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருவது இதற்கு முக்கியக் காரணம் என்று இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அதிக வருவாய் ஈட்டித் தரும் பழங்கள், காய்கறிகள் போன்ற பயிர்களை நோக்கிய பயிர் பன்முகப்படுத்தல் கொள்கையிலிருந்து இந்தியா விலகி, மீண்டும் தானிய உற்பத்திக்கே அதிக முன்னுரிமை அளித்து வருவதை இந்த ஆய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்திய வேளாண் அறிவியல் சஞ்சிகையில் வெளிவந்த ‘இந்திய வேளாண் உணவு முறை உருமாற்றத்தின் புதிய இயங்கியல்’ எனும் அந்த ஆய்வறிக்கையை எழுதிய இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர் எம். எல். ஜாட், பி. எஸ். பிர்தால், எஸ். ஜே. பாலாஜி ஆகியோர், தற்போதைய அரசு கொள்முதல் முறை நீண்டகால அடிப்படையில் நீடிக்க முடியாத ஒன்று என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரிசி, கோதுமைப் பயிர்களுக்கு மட்டுமே அதிகச் சாதகமாக உள்ள தற்போதைய தானியக் கொள்முதல் முறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். சந்தையோடு இணைக்கப்பட்ட புத்தாக்க முறையை ஊக்குவிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போதைய கொள்முதல் முறை இயற்கை வளங்களுக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, பயிர் பன்முகப்படுத்தலுக்கும் தடையாக உள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆய்வறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ள தரவுகளின்படி, 2015ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பழங்கள், காய்கறிகளின் ஆண்டு உற்பத்தி வளர்ச்சி US $7.6 மில்லிய ஆகப் பதிவாகியுள்ளது. இது 1996ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பதிவான 7.7 மில்லியன் டன் வருடாந்திர உற்பத்தியைவிடச் சற்றுக் குறைவாகும்.

1996–2014 காலகட்டத்தின் உற்பத்தியை, 1967–1995 காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், அது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்