இந்திய ஏற்றுமதி சரிவு; உதவித் திட்டங்களை அறிவிக்கும் அரசு

இந்திய ஏற்றுமதி சரிவு; உதவித் திட்டங்களை அறிவிக்கும் அரசு

படம்: தி எக்கனாமிக் டைம்ஸ்

17 Mar 2026 - 3:52 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் சரிவடைந்ததாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.3.37 லட்சம் கோடியாக பதிவாகி உள்ளது என்றும் இது கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது 0.81 விழுக்காடு குறைவு என்றும் வர்த்தக அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது. மறுபுறம் இந்தியாவின் இறக்குமதி விகிதம் அதிகரித்துள்ளது.

இதனிடையே, மத்திய கிழக்குப் பகுதியில் நடைபெற்று வரும் போர் காரணமாக கப்பல் போக்குவரத்தும் விநியோகச் சங்கிலியும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

இதையடுத்து ஏற்றுமதியாளர்களுக்கான உதவித் திட்டங்கள் இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது புதிய ஒப்பந்தங்கள் மூலம் தனது வர்த்தக எல்லைகளை விரிவுபடுத்தி வருகிறது இந்தியா. அதன்படி, பல்வேறு நாடுகளில் இருந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவுக்கு ரூ.5.87 லட்சம் கோடிக்கு இறக்குமதி நடைபெற்றுள்ளது. இது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் செய்யப்பட்ட இறக்குமதியுடன் ஒப்பிடுகையில் 24.11 விழுக்காடு அதிகம்.

இறக்குமதியின் மொத்த மதிப்பு அதிகரிக்க தங்கம், வெள்ளி ஆகியவற்றை அதிகம் இறக்குமதி செய்தது காரணமாகக் கருதப்படுகிறது.

நடப்பாண்டில் பிப்ரவரி மாதம் மட்டும் ரூ.68,647 கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 218.55 விழுக்காடு அதிகம் ஆகும்.

இதேபோல் வெள்ளி ரூ.15,319 கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது 285.23 விழுக்காடு அதிகம்.

தவிர எண்ணெய் இறக்குமதியும் 9 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.1.19 லட்சம் கோடிக்கு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்றும் வர்த்தக அமைச்சின் அண்மைய அறிக்கை தெரிவிக்கிறது.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ரூ.2.49 லட்சம் கோடியாகப் பதிவாகி உள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்துடன் (ரூ.3.20 லட்சம் கோடி) ஒப்பிடும்போது குறைவு என நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

எனினும், கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை ரூ.1.29 லட்சம் கோடியாக இருந்தது.

இந்நிலையில், அரிசி, கடல்சார் பொருள்கள், முத்துக்கள், நகைகள், மருந்துகள், ரசாயனங்கள், மின்னணுச் சாதனங்கள், கட்டுமான இயந்திரங்கள் போன்ற குறிப்பிட்ட சில பொருள்களின் ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்ததாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக உலகம் முழுவதும் வர்த்தக, பொருளியல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கப்பல் போக்குவரத்தில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் தாக்கம் மார்ச் மாத ஏற்றுமதி, இறக்குமதியில் எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்தப் பாதிப்பு தொடர்பான புள்ளி விவரங்கள் வரும் மே மாத மத்தியில் வெளியாகக்கூடும் என துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
மேற்காசியாபோர்ஏற்றுமதிகப்பல்போக்குவரத்துஎண்ணெய்இறக்குமதி