கல்வி பயில வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிவு

கல்வி பயில வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிவு

2 mins read
8f0ad749-1ae7-4c9f-bb74-7203a1a285fd
உயர் கல்விக்காக மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நாடுகளின் பட்டியலில், கடந்த ஆண்டு சீனாவை விஞ்சி இந்தியா முதலிடம் பெற்றது. - கோப்புப் படம்: மில்லினியம் போஸ்ட்

புதுடெல்லி: இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பல்வேறு நாடுகள் விதித்துள்ள விசா கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் பல லட்சம் இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காகப் பல்வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 12 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இதன்மூலம் உயர் கல்விக்காக மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நாடுகளின் பட்டியலில் சீனாவை விஞ்சி இந்தியா முதலிடம் பெற்றது.

இந்நிலையில், சரிந்துவரும் நாணய மதிப்பு, அண்மைய போர்ச் சூழல்கள், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குறைந்துவரும் வேலைவாய்ப்புகள் ஆகியவை இந்திய மாணவர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், உயர் கல்விக்காக வாங்கும் கல்விக் கடன் கணிசமாக அதிகரிப்பதும் இந்திய மாணவர்களை யோசிக்க வைக்கிறது.

திருப்பிச் செலுத்த முடியாத மாணவர், கடனைச் சுமந்துகொண்டு தன் மனத்தைப் பாரமாக்க விரும்பவில்லை என்கிறார் ஜார்க்கண்டு மாநிலத்தைச் சேர்ந்த 29 வயதான பிரகதி பிரியா.

சில நாடுகள் அறிவித்துள்ள விசா நிபந்தனைகள், குடியேற்றம் தொடர்பான கடும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கவனிக்கும்போது வெளிநாடு செல்லக் கடன் வாங்கும் முடிவு சரிதானா என்ற கேள்வி மனத்தில் எழுகிறது என்று பிபிசி ஊடகத்திடம் கூறியுள்ளார் பிரகதி பிரியா.

பிரிட்டனில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் எதிர்வரும் செப்டம்பர் மாத, மாணவர்ச் சேர்க்கைக்கான எண்ணிக்கை குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறார் அப்பல்கலைக்கழகங்களுக்கு இந்தியாவில் இருந்து மாணவர்களை அனுப்பும் எட்வைஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனர் சுஷில் சுக்வானி.

இங்கிலாந்தில் 76 விழுக்காட்டுப் பல்கலைக்கழகங்கள் கடந்த ஜனவரி மாதச் சேர்க்கையின்போது இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகக் கூறியுள்ளன.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரையிலான காலத்தில் மாணவர்ச் சேர்க்கை விகிதம் 7 விழுக்காடு குறைந்துள்ளது.

இந்திய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் கல்வி பயிலச் செல்லும் நாடுகளின் நாணயங்களோடு ஒப்பிடும்போது, இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த எட்டு ஆண்டுகளில் 47 விழுக்காடு சரிந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்