தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிகாலையில் ஆப்கான் கிரிக்கெட் வீரர் செய்த நற்செயல்; ரசிகர்கள் நெகிழ்ச்சி

2 mins read
88975ce0-061c-48cc-8a6c-b07f3bfb1ca0
நடைபாதையில் உறங்கியவர்களுக்கு அருகில் பணத்தை வைத்துவிட்டுச் சென்றார் ரகுமானுல்லா குர்பாஸ். - படங்கள்: ஊடகம்

அகமதாபாத்: தீபாவளி தமக்கான பண்டிகை இல்லை என்றபோதும் அதனைக் கொண்டாடுவோர் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரகுமானுல்லா குர்பாஸ் செய்த நற்செயல் இணையவாசிகள் பலரது கவனத்தை ஈர்த்து, நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் வீடின்றிச் சாலையில் வசித்து வருவோர்க்கு குர்பாஸ் பணம் கொடுத்தார். இதனைத் தற்செயலாகக் கண்ட லவ் ஷா என்ற அகமதாபாத் நகரவாசி, அதனைத் தம் கைப்பேசியில் காணொளியாகப் படம்பிடித்தார்.

“குர்பாஸ் காரிலிருந்து இறங்கி, நடைபாதை அருகில் ஒரு பெண்ணுடன் உரையாடியதைக் கண்டேன். அதன்பின் அந்த நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்தோர்க்கு அருகில் ஏதோ ஒன்றை வைத்துவிட்டுச் சென்றார். அவரை நெருங்கி, தொல்லை தர நான் விரும்பவில்லை. அவர் அங்கிருந்து கிளம்பியதும், நான் சென்று பார்த்தபோது, ஒவ்வொருவர்க்கு அருகிலும் 500 ரூபாய் பணத்தாள்களை அவர் வைத்துவிட்டுச் சென்றது கண்டு நான் வியப்படைந்தேன்,” என்று லவ் ஷா சொன்னதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான காணொளியை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தமது சமூக ஊடகப் பக்கம் வழியாக அவர் பகிர்ந்துகொண்டார்.

“அந்தக் காணொளி பரவலாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆயினும், குர்பாசின் நற்செயல் உரிய அங்கீகாரம் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார் லவ் ஷா.

இந்தியாவில் நடந்துவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி நான்கு போட்டிகளில் வென்று ஆறாம் இடத்தைப் பிடித்தது. இத்தொடரில், தொடக்க ஆட்டக்காரரான 22 வயது குர்பாஸ் இரு அரைசதங்களுடன் 280 ஓட்டங்களை எடுத்தார்.

குறிப்புச் சொற்கள்