புதுடெல்லி: இந்தியாவிலேயே முதன்முதலாக டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் உயர்த்தப்பட்ட விமானப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த விமானப்பாதையும் அவ்விமான நிலையத்தின் நான்காவது ஓடுபாதையும் இம்மாதம் 13ஆம் தேதியிலிருந்து செயல்பாட்டிற்கு வரும் என்று உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
‘ஈஸ்டர்ன் கிராஸ் டாக்சிவேஸ்’ என்ற அந்த உயர்த்தப்பட்ட பாதையானது 2.1 கிலோமீட்டர் நீளமும் 202 மீட்டர் அகலமும் கொண்டது. விமானம் தரையிறங்கிய பின்னரும் பறப்பதற்கு முன்னரும் பயன்படுத்தும் வகையில் அந்த உயர்த்தப்பட்ட பாதை இரண்டு தடங்களைக் கொண்டுள்ளது.
இதன்மூலம் பறக்கத் தொடங்குவதற்கு முன்னரும் தரையிறங்கிய பின்னரும் விமானம் ஓடுபாதையில் இருக்க வேண்டிய நேரம் குறையும் எனக் கூறப்பட்டது.
இப்போது மூன்றாவது ஓடுபாதையில் தரையிறங்கும் ஒரு விமானம் ஒன்றாம் முனையத்தை அடைய 9 கிலோமீட்டர் செல்ல வேண்டும். இனி அத்தொலைவு 2 கிலோமீட்டராகக் குறையும்.
இந்த உயர்த்தப்பட்ட விமானப் பாதையானது ஏர்பஸ் 380, போயிங் 777 போன்ற அகன்ற உடற்பகுதியைக் கொண்ட விமானங்களையும் கையாளவல்லது.
அத்துடன், ஓராண்டிற்கு 55,000 டன் கரியமிலவாயு வெளியேற்றமும் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

