புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில், தொடர்ந்து அதிகரித்துவரும் கட்டட இடிபாடுகள், விபத்துகள், மாநகரின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு குறித்தத் தீவிரக் கேள்விகளை எழுப்பியுள்ளன.
டெல்லி தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 2022 முதல் 2024 வரையிலான மூன்றாண்டுகளில் மட்டும் கட்டட விபத்துகள் தொடர்பாக 1,133 அழைப்புகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளில் சிக்கி 98 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
அண்மையில், டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் அருகே உள்ள சத்ய நிகேதன பகுதியில் நடைபெற்ற இத்தகையச் சம்பவம், இந்த அச்சத்தை மீண்டும் ஒருமுறை தீவிரப்படுத்தியுள்ளது.
ஏறக்குறைய 165 சதுர அடி பரப்பளவில் மட்டுமே அமைந்த ஐந்து மாடிக் கட்டடத்தில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) அக்கட்டடம் திடீரெனச் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
மாநகராட்சி நிர்வாகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், எவ்வித அனுமதி வரைபடமும் இன்றி அக்கட்டடம் கட்டப்பட்டதும் அடித்தளத்தில் சட்டவிரோதமாகப் புனரமைப்புப் பணிகள் நடத்தப்பட்டதும் தெரியவந்தது.
மேலும், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி ஐந்தாவது தளம் கட்டப்பட்டிருந்ததோடு, தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழும் பெறப்படவில்லை.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தா, அவரது மனைவி ஊர்மிளா, மகன் மகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கடமை தவறிய டெல்லி மாநகராட்சியின் ஐந்து அதிகாரிகள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, டெல்லி தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள தரவுகள் தலைநகரையே உலுக்கியுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு அங்கு 349 கட்டடச் சரிவுகள் ஏற்பட்டு 43 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு 371 கட்டடச் சரிவுகள் ஏற்பட்டு 23 பேர் மாண்டு போயினர்.
2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 1,133 கட்டிடங்கள் இடிந்து விழுந்து, 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
சத்ய நிகேதன போன்ற பகுதிகளில் பல்கலைக்கழக விடுதிகள் போதிய அளவில் இல்லாததால், சாதாரண குடியிருப்பு வீடுகள் எவ்விதப் பாதுகாப்பு விதிகளும் இன்றி பல மாடி தனியார் விடுதிகளாகவும் உணவகங்களாகவும் மாற்றப்படுகின்றன.
ஒரு சதுர கிலோமீட்டருக்கு 11,320 பேர் வாழும் அளவுக்கு அதிக மக்கள் அடர்த்தி கொண்ட டெல்லியில், இத்தகைய கட்டுப்பாடற்ற, சட்டவிரோதக் கட்டுமான மாற்றங்களே தொடர் விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாக அமைகின்றன.


