16 ஆண்டுகளில் முதல்முறையாக டெல்லி பேரிடர் நிர்வாக ஊழியர்க்கு சம்பள உயர்வு

16 ஆண்டுகளில் முதல்முறையாக டெல்லி பேரிடர் நிர்வாக ஊழியர்க்கு சம்பள உயர்வு

2 mins read
9c5ddd21-2060-4e91-98e3-d7286d8a5d40
ஊதியக் கட்டமைப்பு திருத்தப்பட்டதால் திட்ட அலுவலர்கள், மாவட்டத் திட்ட அலுவலர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு 100% வரை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. - படம்: இண்டியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: டெல்லி பேரிடர் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் நவீனப்படுத்தவும் அதனை நிபுணத்துவம் வாய்ந்த தொழில்துறையாக மாற்றவும் டெல்லி அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

அதன்படி, டெல்லி மாநிலப் பேரிடர் நிர்வாக ஆணையத்தின் (டிஎஸ்டிஎம்ஏ) கீழ் பணியாற்றும் திட்ட அலுவலர்கள், மாவட்டத் திட்ட அலுவலர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

இத்தகவலை இண்டியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் வெளியிட்டிருந்தது.

புதிய முடிவினால் பேரிடர் நிர்வாக ஆணையத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு 100 விழுக்காடு வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பேரிடர் நிர்வாக அமைப்பின் முதுகெலும்பாகச் செயல்பட்டு வரும் இந்த அதிகாரிகளுக்கு கடந்த 16 ஆண்டுளில் ஒருமுறை கூட ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

எனவே, அவர்களுக்கு நியாயம் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் ஆதரவோடு 2009ஆம் ஆண்டில் இந்தப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அன்றிலிருந்து இன்று வரை, கடந்த 16 ஆண்டுகளாக திட்ட அலுவலர்கள், மாவட்டத் திட்ட அலுவலர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்களின் மாதாந்திர ஊதியத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இக்காலக்கட்டத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதோடு, பேரிடர் நிர்வாகம் சார்ந்த சவால்களும் அவர்களின் பணிப் பொறுப்புகளும் கணிசமாக விரிவடைந்துள்ளன,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

திட்ட அலுவலர்கள், மாவட்டத் திட்ட அலுவலர்களுக்கு ரூபாய் 25,0000 ஆகவும், திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூபாய் 20,000 ஆகவும் மட்டுமே நிலையாக இருந்து வந்தது.

இந்தப் பணியிடங்கள் வழக்கமான அரசு ஊதியக் கட்டமைப்பிலோ அல்லது அதற்கு இணையான ஊதியப் பிரிவுடனோ இணைக்கப்படவில்லை.

இதன் காரணமாக, மற்ற அரசு ஊழியர்களைப் போல இவர்களுக்குக் காலமுறை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்று முதல்வர் ரேகா குப்தா குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்