புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான குளிர் பதிவாகியுள்ளது. அங்குப் பெய்த வரலாறு காணாத கனமழையைத் தொடர்ந்து, அதிகக் குளிரால் மக்கள் அவதியுறுகின்றனர்.
அக்டோபர் மாதத்தில் டெல்லி வட்டாரத்தில் பொதுவாகக் காணப்படும் இயல்பான வெப்பநிலையைக் காட்டிலும் இது மிகக் குறைவு என்று இந்திய வானிலை ஆய்வகம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை திடீரெனக் குறைந்ததாலும் அதிகாலை மற்றும் அந்திப் பொழுதுகளில் மெல்லிய மூடுபனி நிலவியதாலும் தட்பநிலை இயல்பைவிட மிகவும் குறைவாகவே இருந்ததால் பொதுமக்கள் கதகதப்பான ஆடைகளை நாடத் தொடங்கினர்.
அக்டோபர் 30ஆம் தேதி தலைநகரை வாட்டிய குளிரால், டெல்லிவாசிகள் குளிரைச் சமாளிக்கக்கூடிய உடைகளையும் கனமான சால்வைகளையும் அணிந்து கொண்டனர்; இரண்டு நாள்களாகத் தொடர்ந்து பெய்த மழையால் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 20.7 டிகிரி செல்சியசாகக் குறைந்தது. இந்நிலையில், 75 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அக்டோபர் மாதப் பகல்நேர வெப்பநிலை பதிவானது.
மேலும், இந்நகரம் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அதிக மழையுடனான அக்டோபர் நாளையும் அதே காலகட்டத்தில் இல்லாத மிகத் தூய்மையான அக்டோபர் மாதக் காற்றையும் பதிவு செய்தது; காற்றுத்தரக் குறியீடு 60ஆகப் பதிவானது. இது 2022ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி 44 ஆகப் பதிவானதற்குப் பிறகு ஏற்பட்ட மிகக் குறைந்த அளவு.
நாள் முழுவதும் தலைநகரைக் கார்மேகங்கள் சூழ்ந்திருந்தன; விட்டுவிட்டுப் பெய்த மழையால் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாகக் குறைவாகவே நீடித்தது.
