டெல்லி தீவிபத்து: 40 நிமிடம் அலறியும் கிடைக்காத உதவி

டெல்லி தீவிபத்து: 40 நிமிடம் அலறியும் கிடைக்காத உதவி

2 mins read
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
1d765984-0af1-4ffe-a20f-025a39ec4c16
டெல்லியில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புக் கட்டடத்திற்கு வெளியே துயரத்தில் மூழ்கிய குடும்பத்தினர். - படம்: விபின் குமார் / ஹிந்துஸ்தான் டைம்ஸ்

புதுடெல்லி: தென்கிழக்கு டெல்லியின் துக்ளகாபாத் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில், ஐந்து அடுக்கு குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுஷிலா தேவி, 70, இவரது பேரன் பங்கஜ் பாண்டே, 28, பேத்தி சோனி, 20 ஆகிய மூவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கிருந்த மின் ஸ்கூட்டர் (E-Scooter) ஒன்று சார்ஜ் செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தரைத்தளத்தில் பற்றி எரிந்த தீ, அங்கிருந்த ஏழு இருசக்கர வாகனங்கள்மீதும் வேகமாகப் பரவி சேதத்தை ஏற்படுத்தியது.

900 சதுர அடி பரப்பளவில், எவ்வித அவசர கால வெளியேறும் வழியுமின்றி, காற்றோட்டம், தீயணைப்பு உபகரணங்கள் இல்லாமல் அந்த அடுக்குமாடிக் கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது.

அத்துடன், மொட்டை மாடியின் கதவும் பூட்டப்பட்டிருந்ததால், நச்சுப் புகை சூழ்ந்து மேல் தளத்தில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

நான்காவது மாடியில் வசித்து வந்த பங்கஜும் அவரது குடும்பத்தினரும் தங்களைக் காப்பாற்றுமாறு ஏறக்குறைய 40 நிமிடங்களுக்கும் மேலாக பால்கனியில் இருந்து அலறியுள்ளனர்.

ஆனால், புகைமூட்டம், குறுகிய சந்து காரணமாக அவர்களால் தப்பிக்க முடியாமல், மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.

அக்கம்பக்கத்தினர் மர ஏணிகளைப் பயன்படுத்தி மாடி வழியாகச் சென்று சிலரை மீட்டுள்ளனர்.

டெல்லியில் கடந்த இரு வாரங்களில் விதிகளுக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட குடியிருப்புகளில் நடந்த 3வது பெரிய விபத்து இதுவாகும். இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்