மூச்சுத் திணறும் டெல்லி: தீபாவளி வேளையில் காற்றுத் தரம் மோசம்

மூச்சுத் திணறும் டெல்லி: தீபாவளி வேளையில் காற்றுத் தரம் மோசம்

படம்: ஏபி

06 Nov 2026 - 6:42 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் குளிர்காலம் நெருங்கும் நிலையில், காற்றுத்தரக் குறியீடு மீண்டும் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது.

தீபாவளி வேளையில், டெல்லியைச் சூழ்ந்துள்ள அடர்ந்த புகைமூட்டம், நச்சுப்புகையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவின் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தரவுகளின்படி, ‘இந்தியா கேட்’ பகுதியில் காற்றின் தரம் 403ஆகப் பதிவாகி (’கடுமை’) உள்ளது.

அதேபோல், ஆனந்த் விஹார் பகுதியில் 350ஆகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவில் நீடிக்கிறது. பஞ்சாபி பாக், ஜஹாங்கீர்புரி, ரோகிணி உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றுத்தரக் குறியீடு 450க் கடந்து உச்சத்தைத் தொட்டுள்ளது.

இச்சூழலில் நிலைமையைச் சமாளிக்க, டெல்லி அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நகரின் பல்வேறு பகுதிகளில் தூசி, மாசுபாட்டைக் கட்டுப்படுத்த லாரிகள் மூலம் தண்ணீர் பீய்ச்சும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மேலும், வரவிருக்கும் நாள்களிலும் காற்றின் நிலை இதேபோல் அல்லது இன்னும் மோசமாகத் தொடர வாய்ப்பு உள்ளதாகக் காற்றுத்தர மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

அண்டை மாநிலங்களில் நடைபெறும் வைக்கோல் எரிப்பு, வாகனப் புகை, ஆகியவையே காற்று மாசுபாட்டிற்கான முக்கியக் காரணிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டங்கள் நெருங்கும் நிலையில், அதிகரித்து வரும் நச்சுக்காற்றால் குழந்தைகள், முதியவர்கள், சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்