புதுடெல்லி: ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால் டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோவைக் கையகப்படுத்த அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) உத்தரவு விதிக்கப்படக்கூடும் என்று இந்திய உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
புதுடெல்லியில் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ள இந்த மருத்துவமனை, பொதுத்துறைக்கும் தனியார்த்துறைக்கும் இடையேயான ஒத்துழைப்புத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டது.
உள்நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் வெளிநாேயாளிகளில் 40 விழுக்காட்டினருக்கும் இலவச மருத்துவச் சிகிச்சை பாகுபாடின்றி அளிக்கப்பட வேண்டும் என்பது மருத்துவமனையின் உருவாக்கத்திற்குப் பின்புலமாக இருந்த குத்தகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அந்த மருத்துவமனை முழுமையாக வணிக நோக்கத்துடன் செயல்பட்டு ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க மறுப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்திடம் வழக்கு தொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்த நிபந்தனையைப் பின்பற்றும்படி 2009ல் நீதிமன்றம் மருத்துவமனைக்கு உத்தரவிட்டபோதும் மருத்துவமனை, தொடர்ந்து தனது போக்கில் செயல்பட்டு வந்தது.
மருத்துவமனை வருவாயில் டெல்லி அரசு 26 விழுக்காடு பயனடைவதாக அரசுதரப்பு சுட்டியதை அடுத்து குத்தகை ஒப்பந்த விதமுறைகளை இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகம் கூறியது.
மருத்துவமனை வருவாயில் டெல்லி அரசு பங்குகொள்வது துரதிஷ்டவசமானது எனக் கண்டித்த நீதிமன்றம், ஏழைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கத்தை அம்மருத்துவமனை மறந்துவிட்டதாகச் சாடியது.