புதுடெல்லி: இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது 118 காவல்துறையினர் காயமடைந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் பல மூத்த அதிகாரிகளும் அடங்குவர் என்றும் 70 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை உடனடியாக விடுவிக்க வேண்டும், நீட் தேர்வுக்கு அஞ்சி உயிரை மாய்த்துக்கொண்ட ஒவ்வொரு மாணவரின் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் சார்பில் மத்திய அரசிடம் மூன்று கோரிக்கைககள் முன்வைக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் மாணவர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, போராட்டத்தின்போது காயமடைந்தவர்களில் சிறப்பு, இணைய ஆணையர்கள், கூடுதல், துணை ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், டெல்லி, மத்திய காவல்படைகளைச் சேர்ந்த காவலர்கள் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
டெல்லி காவல்துறை ஆணையர் திரு அனுராக் குமார், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தார்.
ஜந்தர் மந்தர் பகுதியில் எதிர்பார்த்ததைவிட அதிகமானோர் கூடியதால் அங்கு வன்முறை வெடித்ததாக அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்தது.
“போராட்டக்காரர்கள் திடீரென சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர். அவர்களுக்கு எங்கிருந்து கற்கள் கிடைத்தன என்பது தெரியவில்லை. இந்தத் தாக்குதலில் ஓர் இளம் பெண் உட்பட அதிகாரிகள் சிலரும் காயமடைந்தனர்,” என்று அந்த அதிகாரி கூறியதாக ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.
இதனிடையே, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஷிதோஷ் ரங்கா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை தங்கள் கட்சி நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர் என்றும் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் நீடிக்கும் என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஜே.பி. நட்டா வெளியிட்ட அறிக்கையில், போராட்டக் குழுவினர் தங்களுடைய போராட்டத்தைக் கைவிட்டு இயல்புநிலையை மீட்டெடுக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

