புதுடெல்லி: விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டத்தை ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகள்மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.
வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லி செல்வோம்’ (டெல்லி சலோ) போராட்டத்தை பஞ்சாப் - ஹரியானா எல்லையில் உள்ள ஷம்புவில் இருந்து விவசாயிகள் டிசம்பர் 6ஆம் தேதி பிற்பகல் தொடங்கினர்.
இதையடுத்து, விவசாயிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுவதற்கான ஏற்பாடுகளும் தண்ணீர் பீய்ச்சும் வாகனங்களும் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன. மேலும், சாலையின் குறுக்கே தடுப்புகளை அமைத்து வாகனங்கள் செல்ல முடியாதவாறு சாலையை மறித்தனர். எனினும், விவசாயிகள் கைகளில் கொடிகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பியபடி பேரணியைட்ஹ் தொடங்கினர்.
தடுப்புகளைப் போராட்டக்காரர்கள் அகற்ற முற்பட்டபோது அவர்கள்மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளைக் காவல்துறையினர் வீசினர். இதையடுத்து, பலரும் சிதறி ஓடினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் அறுவர் காயமடைந்தனர்.