தேர்தல் ஆணையர் விலகக் கோரிக்கை; காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டம்

தேர்தல் ஆணையர் விலகக் கோரிக்கை; காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டம்

படம்: ஏஎஃப்பி

26 Sep 2026 - 6:01 pm

3 mins read

மும்பை: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தை நடத்தியிருக்கிறது.

இந்தியாவின் 28 மாநிலங்களில் குறைந்தது பன்னிரண்டு மாநிலங்களிலாவது, காங்கிரஸ் ஆதரவாளர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அவரைக் கைது செய்யக் கோரும் பதாகைகளை ஏந்தியிருந்தனர். ஒரு சம்பவத்தில், ஞானேஷ் குமார் மற்றும் பிரதமர் மோடியின் உருவ பொம்மைகளை அவர்கள் எரித்தனர்.

தலைநகர் டெல்லியில், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தடுப்புகளைத் தாண்டி ஏறிச் சென்று, ஞானேஷ் குமாரின் முகமூடி அணிந்திருந்த ஒருவரை நோக்கி அவதூறான வார்த்தைகளை வீசினர். கூட்டத்தைக் கலைக்க ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கிக் காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்.

எதிர்க்கட்சிகளின் கூற்றுப்படி மோடியின் பாஜகவுக்குச் சாதகமாக அமையும் வகையிலான வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் குறித்து, துணைத் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமாரிடம் கேள்வி எழுப்பியதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் புதன்கிழமை வெளியான ஒரு செய்திதான் இந்தப் போராட்டத்திற்கு அடித்தளம் அமைத்ததாகக் கூறப்படுகிறது.

வாக்காளர் பட்டியலை முறைகேடாகக் கையாண்டதாக தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமார்மீது அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் சனிக்கிழமைக்குள் (செப்டம்பர் 26), ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் அக்டோபர் 2ஆம் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை தொடங்கவுள்ளதாக கரப்பான்பூச்சி இளையர் இயக்கம் அறிவித்துள்ளது.

இந்த இயக்கம், கடந்த ஜூலையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் கல்வி அமைச்சர் பதவி விலகினார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான 62 வயதான ஞானேஷ் குமார், மோடி அரசாங்கத்தால் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர்.

ஏறக்குறைய அனைத்து எதிர்க்கட்சிகளும் இவருக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளதால் பிரதமர் மோடிக்கு புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அண்மைய ஆண்டுகளாக வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவதாகக் கூறி தேர்தல் ஆணையம், மோடியின் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் தேர்தல் ஆணையமும் பாரதிய ஜனதா கட்சியும் இதனை மறுத்துள்ளன.

காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஞானேஷ் குமாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவரைக் கைது செய்யக் கோரும் பதாகைகளை அவர்கள் பிடித்திருந்தனர். ஓர் இடத்தில் ஞானேஷ் குமார், மோடியின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. தலைநகர் டெல்லியில் நூற்றுக்கணக்கானவர்கள் தடுப்புகளின்மீது ஏறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து ஞானேஷ் குமாரின் துணை ஆணையர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் செப்டம்பர் 23ஆம் தேதி செய்தி வெளியானதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

“மூன்று ஆண்டுகளாக, வாக்குத் திருட்டை அம்பலப்படுத்தி வருகிறேன். இப்போது, தேர்தல் ஆணையர்களே அதை ஒப்புக்கொண்டு உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துவிட்டனர்,” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதற்கிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் நடைமுறை குறித்து தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள சிராக் பஸ்வானின் எல்ஜேபி (ஆர்வி), உபேந்திர குஷ்வாஹாவின் ஆர்எல்எம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.

பொதுமக்களின் சந்தேகங்களைப் போக்குவதற்கு இந்த விளக்கம் அவசியம் என்று அவை குறிப்பிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்