புதுடெல்லி: மத்தியக் கிழக்கில் மோதல் வலுத்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளின் வான்வெளியைத் தவிர்க்குமாறு இந்திய விமான நிறுவனங்களுக்கு பொது விமானப் போக்குவரத்து இயக்ககம் (டிஜிசிஏ) அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில்கொண்டு, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் விமானங்களுக்கான மாற்றுப்பாதைகளைத் தேர்வுசெய்வது உள்ளிட்ட தயார்நிலை உத்திகளை வகுக்கும்படி விமான நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கெனவே ஈரான், ஈராக் வான்வெளியைத் தவிர்த்து, மாற்றுவழிகளில் விமானங்களை இயக்கத் தொடங்கிவிட்டது. இதனால் பயண நேரம் அதிகரித்துள்ள நிலையில், விமானப் பணியாளர்களின் பணி நேரக் கட்டுப்பாடுகளை டிஜிசிஏ தற்காலிகமாகத் தளர்த்திக்கொண்டுள்ளது.
இது குறித்துக் கருத்துரைத்த இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, “பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளையில், விமானச் சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க வெளிநாட்டு ஒழுங்குமுறை அமைப்புகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்,” என்றார்.
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ள சில விமான நிலையங்கள் அவ்வப்போது செயல்படாமல்போவது சவாலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தரைவழியாக மீட்கப்படும் இந்தியர்கள்
இதற்கிடையே, ஈரானில் நிலவும் பதற்றமான சூழலால் அங்கிருந்து 900 இந்தியர்கள் தரைவழியாக ஆர்மீனியா, அஜர்பைஜான் நாடுகளைச் சென்றடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரான் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், இந்தியர்களைத் தரைவழியாக அண்டை நாடுகளுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து தாய்நாட்டிற்கு மீட்டுவருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஏற்கெனவே பலரும் தாயகம் திரும்பியுள்ள நிலையில், மற்றவர்களுக்கான விசா மற்றும் பயண ஏற்பாடுகளை இந்தியத் தூதரக அதிகாரிகள் ஒருங்கிணைத்து வருகின்றனர்.

