புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வீடுகளின் முகவரிகளைக் கண்டுபிடிக்க, இந்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
இதற்காக ஒவ்வோர் வீட்டுக்கும் ‘டிஜிபின்’ (DIGIPIN) என்ற மின்னிலக்க எண் கொடுக்கப்பட உள்ளது.
இந்தத் தனித்துவமான 12 இலக்க குறியீட்டுடன் கூடிய மின்னிலக்க முகவரி விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
ஒரு வீட்டின் அல்லது இடத்தின் முகவரியை, ‘ஜிபிஎஸ்’ மூலம் துல்லியமாகக் கண்டறிய உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கடந்த 53 ஆண்டுகளாக இந்தியாவில் ‘பின்கோட்’ எனப்படும் அஞ்சல் அடையாள எண்ணின் மறுவடிவம்தான் இந்த ‘டிஜிபின்’ என்ற மின்னிலக்க முகவரியாகும்.
இதற்காக, பூகோள ரீதியிலான தரவுகளை வைத்து மின்னிலக்க முகவரிகளை உருவாக்கும் நடவடிக்கைகளை அஞ்சல் துறை அண்மையில் தொடங்கியுள்ளது.
‘இஸ்ரோ’, ‘ஐஐடி’ (ஹைதராபாத்), தேசிய தொலை உணர்வு நிலையம் ஆகியவை இந்த நடவடிக்கையை மேம்படுத்த உதவுகின்றன.
இந்தப் புதிய நடைமுறையானது, தொலை தூரங்களில் வசிக்கும், வீட்டு இலக்கம் இல்லாத குடியிருப்பு வசதிகளுக்கு மிக உதவிகரமாக இருக்கும் என்றும் மலைப் பிரதேசங்களில் வாழ்பவர்களின் வீட்டு முகவரியைக் கண்டுபிடிப்பதில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
அரசு நலத் திட்டங்கள், நுகர்வோரை முறையாகச் சென்றடைந்ததா என்பதைக் கண்டறிய உதவும் என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

