மும்பை: ‘மின்னிலக்க கைது’ எனக் கூறி, 77 வயது மூதாட்டியிடமிருந்து ரூ.3.8 கோடி பணத்தை மோசடிக் கும்பல் சுருட்டியுள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக அப்பெண்மணியை மோசடிக்காரர்கள் மிரட்டியதாகக் கூறப்பட்டது.
சட்டத்துறை அதிகாரிகள் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட மோசடிக்காரர்கள், பணமோசடி வழக்குத் தொடர்ந்துவிடுவோன் என அப்பெண்ணை மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரைச் சேர்ந்த அந்த மூதாட்டி, பணி ஓய்வுப்பெற்ற தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இவர்களது பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.
சில நாள்களுக்கு முன்பு அப்பெண்மணிக்கும் ‘வாட்ஸ் ஆப்’ செயலிவழி அழைப்பு ஒன்று வந்ததாகவும் அந்த அழைப்பில் பேசிய நபர் தன்னை அரசாங்க அதிகாரி என அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த மூதாட்டியின் பெயரில் தைவானுக்கு வந்த தொகுப்பு ஒன்றில் ஐந்து கடப்பிதழ், வங்கிக் கணக்குப் புத்தகம், 4 கிலோ துணிகள், போதைப் பொருள்கள் ஆகியவை இருந்ததாக அவரிடம் அந்த நபர் கூறினார்.
அதுபோன்ற எந்தப் பொருளையும் தான் அனுப்பவில்லை எனக் கூறிய மூதாட்டியிடம் தங்கள் அழைப்பை மும்பை காவல்துறைக்கு மாற்றுகிறேன் அவர்களிடம் பேசிக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார் அந்த மோசடிபேர்வழி.
அந்த அழைப்பில் பேசிய மற்றொரு நபர் தன்னை காவல்துறை உயரதிகாரி எனக் கூறி, போலி அடையாள அட்டையை காணொளி வாயிலாக அந்த மூதாட்டியிடம் காண்பித்தார். அனைத்தையும் உண்மை என நம்பிய அப்பெண்மணி அவர்கள் சொல்வதைச் செய்யத் தொடங்கினார்.
24 மணி நேரமும் ‘ஸ்கைப்’ செயலி அழைப்பில் இணைந்திருக்க வேண்டும் என்றும் பெண்மணியை வலியுறுத்தினர். பிறகு, நேரடியாக வங்கிக்குச் சென்று பணப்பரிமாற்றம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் ரூ.15 லட்சத்தை அனுப்பியிருக்கிறார். ஒரு சில நாள்கள் கழித்து விசாரணை முடிந்துவிட்டதாகக் கூறி, அந்தத் தொகையை மோசடிக்காரர்கள் அப்பெண்ணின் வங்கிக் கணக்குக்கே திருப்பியனுப்பினர். இதனால், அப்பெண்மணிக்கு அவர்கள்மீது நம்பிக்கை ஏற்பட்டது. பிறகு,அப்பெண்ணின் வங்கிக் கணக்கு மற்றும் கணவரின் வங்கிக் கணக்கிலிருந்து ஒட்டுமொத்தமாக ரூ.3.8 கோடியை ஆறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்ப வேண்டும் என மோசடிகாரர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
அப்பணம் வங்கி கணக்குக்குத் திரும்ப வரவில்லை. அப்போதுதான், இது மோசடி என்பதே அப்பெண்மணிக்குத் தெரிய வந்தது. உடனடியாக, இணையக் குற்ற காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. மோசடிக்காரர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.