இந்தியா செல்லும் வெளிநாட்டவர்களுக்காக மின்னிலக்க வருகை அட்டை அறிமுகம்

2 mins read
இந்தியக் குடிமக்கள், ‘ஓசிஐ’ அட்டைதாரர்களுக்கு விலக்கு
a3a7e3b6-651f-43a1-87cc-629a5a0ce10c
வேலை, சுற்றுலா, கல்வி அல்லது தொழில் சார்ந்து இந்தியா செல்லும் வெளிநாட்டவர்கள் மின்னிலக்க வருகை அட்டையை இணையம் வழியாகச் சமர்ப்பித்துவிடலாம். - படம்: indianvisaonline.gov.in

இந்தியா செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கையால் வருகைப் படிவத்தை எழுதித் தர வேண்டிய தேவையில்லை. இனி அதனை இணையம் வழியாகவே செய்துவிடலாம்.

அவர்கள் இதுநாள்வரை வருகைப் படிவத்தைக் கையால் எழுதி, அதனை குடிநுழைவு முகப்பில் கொடுக்க வேண்டியிருந்தது.

வேலை, சுற்றுலா, கல்வி அல்லது தொழில் சார்ந்து இந்தியா செல்லும் வெளிநாட்டவர்கள் மின்னிலக்க வருகை அட்டையை இணையம் வழியாகச் சமர்ப்பித்துவிடலாம்.

இந்த நடைமுறை அக்டோபர் 1ஆம் தேதி புதன்கிழமையிலிருந்து நடைமுறைக்கு வருவதாக இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

மின்னிலக்க வருகை அட்டையில் கடப்பிதழ் எண், குடியுரிமை, இந்தியா செல்வதற்கான காரணம், இந்திய முகவரி, தொடர்பு விவரம் போன்ற அடிப்படைத் தகவல்களை நிரப்ப வேண்டியிருக்கும். எந்த ஓர் ஆவணத்தையும் உடன் இணைக்க வேண்டியிராது.

இந்தியக் குடிமக்களுக்கும் ‘ஓசிஐ’ அட்டைதாரர்களுக்கும் இந்த மின்னிலக்க வருகை அட்டையைப் பூர்த்தி செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நுழைவு அனுமதி பெறுவதற்காக குடிநுழைவு முகப்புகளில் வெளிநாட்டவர்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை இனி இராது.

விமான நிலையங்களில் பயணிகள் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மின்னிலக்க வருகைப் படிவம் அறிமுகமாகிறது.

https://indianvisaonline.gov.in/earrival எனும் இணையப்பக்கத்திற்குச் சென்று மின்னிலக்க வருகை அட்டையைப் பூர்த்தி செய்யலாம்.

முன்னதாக, இந்தியக் குடிமக்களும் ‘ஓசிஐ’ அட்டைதாரர்களும் குடிநுழைவு நடைமுறையை விரைந்து நிறைவேற்ற வழிவகை செய்யும் விரைவுக் குடிநுழைவு - நம்பகமான பயணித் திட்டம் (FTI-TTP) இம்மாதத் தொடக்கத்தில் திருச்சி உள்ளிட்ட மேலும் ஐந்து விமான நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு, அவ்வசதி மொத்தம் 13 விமான நிலையங்களில் நடைமுறையில் இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்