19 மாநிலங்களில் 8.48 கோடி விவசாயிகளுக்கு மின்னிலக்க அடையாள அட்டை

19 மாநிலங்களில் 8.48 கோடி விவசாயிகளுக்கு மின்னிலக்க அடையாள அட்டை

2 mins read
f6730598-afee-4c15-a861-c58234842406
மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விவசாயிகளுக்கு மின்னிலக்க அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவித்தார். - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: வேளாண் துறையில் மின்னிலக்க முறை வேகமாக விரிவுபடுத்தப்படுகிறது. தமிழகம் உட்பட 19 மாநிலங்களைச் சேர்ந்த 8.48 கோடி விவசாயிகளுக்கு மின்னிலக்க அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தில் துணைக் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:

முந்தைய ஆட்சிக் காலத்தில் வேளாண் துறையில் மின்னிலக்க முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது வேளாண் துறையில் மின்னிலக்க முறை வேகமாக விரிவுபடுத்தப்படுகிறது.

‘அக்ரி ஸ்டாக்’ இணையத்தளம் மூலம் வேளாண்மை, விவசாயிகள் தொடர்பான அனைத்து விவரங்களும் மின்னிலக்க முறையில் சேகரிக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன.

விவசாயக் கிராம விவரங்கள், அங்குள்ள காலநிலை, உயிரிச்சூழல், சாகுபடிப் பயிர்கள் என அனைத்து விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

தமிழகம், ஆந்திரம், பீகார், குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகம் உட்பட 19 மாநிலங்களைச் சேர்ந்த 8.48 கோடி விவசாயிகளுக்கு மின்னிலக்க அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதில் அவர்களின் நில விவரம், குடும்ப விவரம் என அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்ததாகக் கோவா, சிக்கிம், ஜம்மு-காஷ்மீர் விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. இத்திட்டத்திற்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனைத்து நிலைகளிலும் உதவி வருகிறது.

விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதன் மூலம் அவர்களுக்கான நிதியுதவி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது, குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் விளைபொருளுக்குப் பணம் செலுத்துவது என அனைத்தும் எளிதாக நடைபெறுகிறது.

செயற்கை நுண்ணறிவுத் துணையுடன் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. பேரிடர்களால் ஏற்படும் பயிர் சேதங்கள் துல்லியமாக அறியப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கவும் இந்த மின்னிலக்க முன்னெடுப்புகள் பெரிதும் உதவுகின்றன என்றார்.

குறிப்புச் சொற்கள்