புதுடெல்லி: பயணிக்கு சுகாதாரமற்று, அழுக்காக இருந்த இருக்கையை ஒதுக்கியதற்காக இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டது.
அண்மைக்காலமாக விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு, விமானம் தாமதமாவது என இந்திய விமான நிறுவனங்கள் குறித்து ஏதேனும் ஒரு செய்தி ஊடகங்களில் நாள்தோறும் இடம்பெறுகிறது.
இந்நிலையில் இந்தியாவின் ஆகப்பெரிய தனியார் விமான நிறுவனமான இண்டிகோ மீது பயணி ஒருவர் சேவைக் குறைபாடு தொடர்பாகக் குற்றஞ்சாட்டி உள்ளார்.
டெல்லியில் இருந்து அஜர்பைஜான் தலைநகர் பாகு செல்லும் விமானத்தில் பிங்கி என்ற அந்தப் பயணி கடந்த ஜனவரி 2ஆம் தேதி பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது தமக்கு அழுக்கான இருக்கை வழங்கப்பட்டதாக அவர் கூறினார். ஏறக்குறைய நான்கரை மணி நேரம் நீடித்த அந்தப் பயணத்தின்போது அந்த இருக்கையிலேயே மன உளைச்சலுடனும் வேதனையுடனும் இருந்ததாகக் கூறியுள்ளார் பிங்கி.
தனக்கு பல கறைகள் உள்ள அழுக்கு இருக்கை வழங்கப்பட்டதாகக் கூறியதுடன் நிற்காமல், தாம் அளித்த புகாரில் விமான நிறுவனம் உரிய கவனம் செலுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர், நுகர்வோர் மன்றத்தை அணுகினார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் மன்றம், விமான நிறுவனத்தின் எதிர்வாதத்தை ஏற்க மறுத்து அபராதம் விதித்தது.