ஒழுங்கு நடவடிக்கை: நாமக்கல் கிழக்கு மாவட்டத் தவெக செயலாளர் செந்தில்நாதன் கட்சியிலிருந்து நீக்கம்

1 mins read
e3128062-1ad4-4408-8db6-d90abc585850
தவெக தலைவருடன் நாமக்கல் கிழக்கு மாவட்டத் தவெக செயலாளர் செந்தில்நாதன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். - படம்: தினமாலை

பெண் நிர்வாகியுடன் தனிமையில் இருந்ததால் நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தவர், ராசிபுரத்தைச் சேர்ந்த ஜே.ஜே. செந்தில்நாதன்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில், நாமக்கல் கூட்டப்பள்ளி பகுதியில் உள்ள அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குச் செந்தில்நாதன் சென்றுள்ளார். அங்கு அவர் அந்தப் பெண் நிர்வாகியுடன் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்துத் தகவலறிந்த பெண்ணின் உறவினர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் அமைந்தது.

இந்த விவகாரம் தலைமைக்குச் சென்றதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில், “கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தொடங்கப்பட்ட சில காலத்திலேயே மாவட்டச் செயலாளர் ஒருவர் ஒழுங்கு நடவடிக்கைக்காக நீக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்