சொத்துக் குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

சொத்துக் குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

கோப்புப் படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

13 Aug 2026 - 6:33 pm

2 mins read

புதுடெல்லி: இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, தமக்கு எதிரான வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.  

ராகுல் காந்தியின் சொத்துகள் தொடர்பாக கர்நாடக பாஜக உறுப்பினரான விக்னேஷ் சிஷிர் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு சிபிஐ, அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும், கடந்த ஜூலை 20ஆம் தேதி சிபிஐ தாக்கல் செய்த முதற்கட்ட அறிக்கை மனநிறைவு அளிப்பதாக இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து மூத்த அதிகாரி ஒருவர் நேரில் புதிய உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

சட்டவிரோத ஆதாரங்களைக் கண்டறிந்தால் சட்ட நடவடிக்கைகளைத் தொடரலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ராகுல் காந்தி தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளையும் அதன் விசாரணை நடைமுறைகளையும் எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். மேலும், இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும் அவர் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.  

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் மேற்கொள்ள இருக்கும் விசாரணை சமூக ஊடகங்களில் புதிய விவாதப்பொருளாக மாறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்