ஜெய்ப்பூர்: மூன்று வயது மகளை அங்கன்வாடி மையத்தில் சேர்த்த ஐஏஎஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிகின்றன. எனினும், அவரது இந்த முடிவை சமூக ஊடகங்களில் சிலர் விமர்சித்தும் உள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின், சித்ரகூட் மாவட்ட ஆட்சியர் புல்கித் கார்க், தன் மூன்று வயது மகள் சியாவை அண்மையில் உள்ளூர் அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார்.
தனது இந்த முடிவுக்கு, அரசுக் கல்வி முறையில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதே முக்கியமான காரணம் என்று புல்கித் கார்க் கூறியுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தனது குழந்தையை அரசு அங்கன்வாடி மையத்தில், அரசுப் பள்ளியில் படிக்க வைக்க முடியுமெனில், சாமானியர்களும் இதைப் பின்பற்றத் தயங்கத் தேவையில்லை என்று கூறுகிறார் புல்கித் கார்க்.
அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களின் உள்கட்டமைப்பு மற்றும் அங்கு குழந்தைகளுக்கான ஒட்டுமொத்த சூழல், இது தொடர்பான மக்களின் பார்வை இப்போது மாறியுள்ளதாக தாம் நம்புவதாக அவர் அண்மைய ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு குழந்தையின் தொடக்கக் கால வளர்ச்சியில் உடல்நலம், ஊட்டச்சத்து, நற்பண்புகள் ஆகியவை மிகவும் முக்கியமான அம்சங்கள் என்றும் இவைதான் குழந்தைகளை எதிர்காலத்துக்கு ஏற்றார்போல் செதுக்குகின்றன என்றும் புல்கித் கார்க் கூறியுள்ளார்.
எனவே, பொதுக் கல்விமுறை மீது குடிமக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர், மக்களின் நம்பிக்கைதான் இந்த அமைப்பை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவரது மகள் அங்கன்வாடி மையத்தில் விளையாடும் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பலர் புல்கித் கார்க்கின் இந்தச் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
அதேசமயம் இது தவறான முடிவு என்றும் அரசுத் துறைகளில் உள்கட்டமைப்பில் குளறுபடிகள் இருப்பது மாவட்ட ஆட்சியருக்கு இனிமேல்தான் தெரியவரும் என்றும் ஒருதரப்பினர் விமர்சித்துள்ளனர்.

