அயோத்தி: தீப உற்சவத்திற்காக புதன்கிழமை இரவு அயோத்தி ராமர் கோவில், சரயு நதிக்கரை ஆகியவை 28 லட்சம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.
இது கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது. மேலும், சரயு நதிக்கரையில் 1,100 பேர் ஆரத்தியும் எடுத்தனர்.
ராமர் வனவாசத்தை முடித்துவிட்டு அயோத்தி திரும்புவதைத் தீபாவளியாகவும் தீப உற்சவமாகவும் வட இந்தியாவில் ஐந்து நாள் கொண்டாடப்படுகிறது.
அயோத்தியில் ராமர் சிலை குடமுழுக்கு செய்யப்பட்டபின், அங்கு முதல் முறையாக நடைபெறும் தீப உற்சவத்தை மிகப் பிரம்மாண்டமாக நடத்த உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்து தற்போது அதில் வெற்றிபெற்றுள்ளது.
காற்று மாசைக் குறைக்க கோவிலுக்கு வெளியே மெழுகு விளக்குகள் பயன்படுத்தப்பட்டன.
கின்னஸ் சாதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், கின்னஸ் உலகச் சாதனைகள் அமைப்பைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினரும் அங்கு வந்திருந்தனர். அவர்கள் ‘டிரோன்கள்’ மூலம் விளக்குகளை எண்ணினர்.