காவிரி விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: கர்நாடக முதல்வர் வலியுறுத்து

காவிரி விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: கர்நாடக முதல்வர் வலியுறுத்து

2 mins read
49e7444c-c574-4de2-9788-916abbf65cad
தமிழ்நாட்டு முதல்வர் விஜய்க்கு எதிர்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை கர்நாடகாவின் மாண்டியாவில் போராட்டம் நடத்தப்பட்டது. - படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
Google News Preferred Icon

மைசூரு: கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரைத் திறந்துவிடும் விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், இதனை அரசியலாக்க வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) காலையில் மாண்டியா மாவட்டத்தில் கர்நாடக ரக்சண வேதிகே அமைப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிடுவதற்கும் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாட்டு முதல்வர் விஜய் கர்நாடகா வருவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

‘விஜய் திரும்பிப் போ’ (Go Back Vijay) என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தி இருந்தனர்.

முதல்வர் விஜய்யின் வருகை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகக் கர்நாடக முதல்வர் தெரிவித்திருக்கும் நிலையில், இனி எப்போதும் தமிழ்நாட்டு முதலமைச்சரை வரவழைத்து பேச்சு நடத்தக்கூடாது என்று போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆகஸ்ட் 13ஆம் தேதி முழு அடைப்புக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

ஆனால், போராட்டம், முழு அடைப்பு என்று காவிர் நீர் விவகாரத்தைப் பெரிதாக்க வேண்டாம் என்றும் அதனை அரசியலாக்க வேண்டாம் என்றும் கர்நாடக முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பாஜகவும் தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகளும் காவிர் நீர் விவகாரத்தை அரசியலாக்கி வருவதாக அவர் கூறினார்.

சனிக்கிழமையன்று மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு போராட்டத்தையும் அரசு தடுக்காது. ஆனால், மக்கள் நலன் கருதியே போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

“பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கவோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தவோ கூடாது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால், அரசு மற்றும் நீதிமன்றங்கள் உரிய நடவடிக்கை எடுக்கும். போராட்டத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய அமைப்புகளிடம் முறையிடுகிறேன்.

“கர்நாடகாவின் நீர் நிலைமை குறித்து மத்திய அமைச்சர்களான பிரகலாத் ஜோஷி, முனியப்பா, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். அவர்கள் மூலம் மத்திய அரசுக்கு கர்நாடகாவின் நீர் நிலைமை குறித்து விளக்கப்பட்டுள்ளது,” என்று சிவகுமார் கூறினார்.

குறிப்புச் சொற்கள்