அமெரிக்க தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் விபத்து குறித்த ஊகங்களைச் சாடியது

ஏர் இந்தியா விபத்து குறித்து ஊகங்களைப் பரப்பவேண்டாம்

2 mins read
4f6c0d9b-bdac-419e-8748-c3598e1192c2
ஏர் இந்தியா விபத்து குறித்து வெளிவந்த ஊடகச் செய்திகள் ஊகத்தின் அடிப்படையிலானது என்றும் முழுமையானது அல்ல என்றும் அமெரிக்க தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் கூறியது. - படம்: ராய்ட்டர்ஸ்

அகமதாபாத்: இந்தியாவில் ஜூன் 12ஆம் தேதி விபத்துக்குள்ளான ஏர் இந்தியா 171 விமானம் குறித்து விசாரணை முடிவதற்குள் நடந்ததுபற்றி முடிவுகட்டிவிட முடியாது என்று அமெரிக்க தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியத்தின் தலைவர் ஜெனிஃபர் ஹொமென்டி கூறியுள்ளார்.

விமானத்தின் மூத்த விமானி ஒருவர் இயந்திரங்களுக்கு எரிபொருளை அனுப்பும் விசையை முடக்கியதாகக் கூறப்படும் செய்திகளை அடுத்து அவர் அவ்வாறு கூறினார்.

ஏர் இந்தியா விபத்து குறித்து வெளிவந்த ஊடகச் செய்திகள் ஊகத்தின் அடிப்படையிலானது என்றும் முழுமையானது அல்ல என்றும் திருவாட்டி ஹொமென்டி குறிப்பிட்டார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் ஜூன் 12ஆம் தேதி விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா போயிங் 787-7 டிரீம்லைனர் ரக விமானம் குறித்த விசாரணையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு அமெரிக்க தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியத்தின் ஆதரவில் செய்கிறது.

விசாரணை தொடரும் வேளையில் ஊகங்களைத் தவிர்க்கும்படி இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பிரிவும் ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கெம்பல் வில்சனும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டனர்.

“இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு இப்போதுதான் தொடக்கநிலை அறிக்கையை வெளியிட்டது. இத்தனை பெரிய அளவிலான விசாரணைக்கு நேரம் ஆகும். புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு விடுத்த கோரிக்கைக்கும் தொடரும் விசாரணைக்கும் நாங்கள் முழு ஆதரவு தருகிறோம். விசாரணைக்குரிய கேள்விகள் அனைத்தும் இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பிரிவிடம் கேட்கப்படவேண்டும்” என்று திருவாட்டி ஹொமென்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், போயிங் 787 ரக விமானத்தில் இருந்த இரண்டு எரிபொருள் விசைகள் புறப்பாட்டுக்குப் பின் முடக்கநிலைக்கு மாற்றப்பட்டன. அதன் விளைவாக இயந்திரங்களுக்குச் செல்லும் எரிபொருள் துண்டிக்கப்பட்டது.

10 விநாடிகளில் அந்த விசைகள் வழக்கநிலைக்கு மாற்றப்பட்ட பிறகும் விமானம் உந்துசக்தியை இழந்துவிட்டதால் விபத்துக்குள்ளானது.

குறிப்புச் சொற்கள்