நோயாளி படம் பார்த்தபடி இருக்க மூளை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் (காணொளி)

நோயாளி படம் பார்த்தபடி இருக்க மூளை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் (காணொளி)

1 mins read
afadcba8-8ce2-4712-88d9-1c50530053d7
கைக்கணினியில் படம் பார்க்கும் நோயாளி. - படம்: எக்ஸ் / சுதாகர் உடுமுலு

காக்கிநாடா: தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த படத்தை நோயாளி பார்த்தபடி இருக்க, மருத்துவர்கள் அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்த காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

இந்தியாவின் ஆந்திர மாநிலம், காக்கிநாடா அரசுப் பொது மருத்துவமனையில்தான் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது.

ஏ. அனந்தலட்சுமி, 55, என்ற பெண் நோயாளியின் மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.

கைவிரல்கள் மரத்துப்போதல், அடிக்கடி ஏற்படும் தலைவலி போன்ற பிரச்சினைகளால் அவர் அவதிப்பட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விரிவான மருத்துவச் சோதனையில், அவரது மூளையின் இடப்பக்கத்தில் 3.3 செ.மீ. X 2.7 செ.மீ. என்ற அளவிற்கு ஒரு கட்டி இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

உடனே அறுவை சிகிச்சை செய்து, அக்கட்டியை அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, நோயாளியை விழிப்புடன் இருக்கச் செய்து, அவரது மண்டையைத் திறந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.

அறுவை சிகிச்சையின்போது ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான அதுர்ஸ் எனும் திரைப்படத்தை அனந்தலட்சுமி கண்டு ரசித்தார்.

அறுவை சிகிச்சை இரண்டரை மணி நேரம் நீடித்ததாகவும் அவரது மூளையில் இருந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்