புதுடெல்லி: இந்தியாவின் உச்ச நீதிமன்றம் பட்டாசுகளுக்கு முழுமையாகத் தடை விதிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியிலும் தேசிய தலைநகர் பகுதியிலும் பட்டாசுகளை வெடிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து பட்டாசுகளை வெடிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், பட்டாசுகளின் நச்சுக்காற்று வளிமண்டலத்தில் மூன்று மாதங்கள்வரை இருக்கும் என்றும் தசரா பண்டிகையைத் தொடர்ந்து டெல்லியில் காற்று மாசுபாடு 179லிருந்து 245ஆக உயர்ந்தது என்றும் கூறினர்.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது இரண்டு நாள்கள் மட்டும் பசுமைப் பட்டாசுகளுக்கு அனுமதியளித்தபோது காற்று மாசு 1,000 புள்ளிகளைக் கடந்தது. எனவே பட்டாசுகளுக்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர், சிவகாசி உற்பத்தியாளர்கள் உரிமம் பெற்று அரசு அனுமதித்துள்ள அளவிலேயே ரசாயனங்களைப் பயன்படுத்திப் பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்கின்றனர் என்றார்.
காற்று மாசுபாட்டைத் தடுக்க போலித் தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்யலாம் என்ற வழக்கறிஞர், ஒட்டுமொத்தமாகப் பட்டாசுகளுக்குத் தடை விதிப்பது சாமானிய மக்களைப் பாதிக்கும் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தீபாவளிக் கொண்டாட்டம் என்பது மக்களின் மனநிலை சார்ந்தது. மக்களாகவே முன்வந்து படிப்படியாகப் பட்டாசு வெடிப்பதைக் குறைக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்,” என்று விளக்கம் அளித்தனர்.
விளக்குகளை ஏற்றி வழிபடுவதே உண்மையான மரபு என்று மேலும் கூறிய அவர்கள், பட்டாசுகளுக்கு முழுமையாகத் தடை விதிக்க விரும்பவில்லை என்றும் சமூகத்தில் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டனர்.
பட்டாசு விதிமீறல் தொடர்பாகச் சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டால் நிலைமை சீராகும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
டெல்லியிலும் தேசிய தலைநகர் பகுதியிலும் பட்டாசு வெடிப்பது குறித்து ஓரிரு நாள்களில் சமநிலையான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
