துடிப்பைத் தொடர்ந்த இதயம்: 50 நிமிடங்களில் 90 கி.மீ. பயணம்

துடிப்பைத் தொடர்ந்த இதயம்: 50 நிமிடங்களில் 90 கி.மீ. பயணம்

2 mins read
93c3c1c6-cd15-435e-a4db-edfc1b142f1b
குல்தீப் குடும்பத்தார். - படம்: ஈடிவி பாரத்
multi-img1 of 2

புதுடெல்லி: மூளைச்சாவு அடைந்த ஆடவரின் இதயம், அடுத்த 50 நிமிடங்​களில் மற்றொருவருக்குப் பொருத்தப்பட்டது. இதற்காக அகற்றப்பட்ட அந்த இதயம் 90 கிலோமீட்டர் தூரம் கொண்டு செல்லப்பட்டது.

ஹரியானாவைச் சேர்ந்தவர் குல்தீப். 37 வயதான இவர், சிறை வார்டனாகப் பணியாற்றி வந்தார்.

11 மாதங்களுக்கு முன்பு தனது இடது கண்களில் அவ்வப்போது வலி ஏற்படுவதாகக் கூறிய அவருக்கு, மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்ததால் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். எனினும், முன்னேற்றம் ஏதுமில்லை.

இதையடுத்து, கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி ஹரி​யா​னா​வின் ரோதக் பகுதியில் உள்ள பிஜிஐஎம்​எஸ் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்பட்டார் குல்தீப். சில பரிசோதனைகளுக்குப் பிறகு, மறுநாள் அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. உடல் உறுப்​பு​களைத் தான​மாக வழங்க குல்தீப் குடும்பத்தாருக்கு மருத்துவர்கள் ஊக்கமளித்தனர்.

இதையடுத்து, அவரது மனைவி பிரோமிலா கணவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தார்.

குல்தீப்பின் உடல் உறுப்புகளை அகற்றும் நடைமுறை கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்குத் தொடங்கி 7.30 மணி வரை நடைபெற்றது.

தன் கணவரால் பலர் மறுவாழ்வு பெற்றதை எண்ணி மனநிறைவு அடைந்தாலும், கணவரது நான்கு மாத ஊதியம் இன்னும் தமக்கு வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார் பிரோமிலா. மாநில சிறைத்துறை எந்த உதவியும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

குல்தீப்பின் மூத்த மகன் பாருல் மருந்தாளுநர் (ஃபார்மசிஸ்ட்) படிப்பும் மகள் தனு ஆசிரியர் பணிக்கான பயிற்சியும் பெற்று வருகின்றனர்.

முன்னதாக, தானமாகப் பெறப்பட்ட இதயத்தை ரோதக் பகுதி மருத்துவமனையில் இருந்து ஓக்லா பகுதி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டது.

இரு மருத்துவமனைகளுக்கு இடையேயான தூரம் 90 கிலோமீட்டர் என்பதால், இதயத்தை விரைவாகக் கொண்டுசெல்ல போக்குவரத்து காவல்துறை உதவிக்கரம் நீட்டியது.

ஓர் ‘ஆம்புலன்ஸ்’ வாகனத்தில் ரோதக் பகுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டபோது, வழிநெடுகிலும் காவல்துறையினர் தடையற்ற போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

50 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் ஓக்லா பகுதி மருத்துவமனையைச் சென்றடைந்தது. அங்கு இதயச் செயலிழப்​பால் உயிருக்குப் போராடிக் கொண்​டிருந்தவருக்கு மருத்​து​வர்​கள் தானமாகப் பெறப்பட்ட இதயத்தை வெற்​றிகர​மாகப் பொருத்​தினர்.

மூளைச்​சாவு அடைந்தவரின் நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம் உள்ளிட்ட மற்ற உடல் உறுப்​பு​கள் தேவைப்பட்ட பலருக்குப் பொருத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்