தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா - அமெரிக்கா இடையே சிறப்பான பிணைப்புள்ளது: டிரம்ப்

2 mins read
99fe6dd4-0afe-4754-ae33-6ce406a62a76
வெள்ளைமாளிகையில் வெள்ளிக்கிழமை (செம்டம்பர் 5) அன்று உரையாற்றிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஒரு சிறந்த பிரதமர் என்று பாராட்டிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மோடியுடனான தமது நீண்ட கால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியா உடன் மிகவும் சிறப்பான பிணைப்புள்ளது என்ற அவர், தற்போதுள்ள சில பதற்றங்கள் தற்காலிகமானவை என்று வெள்ளைமாளிகை வெள்ளிக்கிழமை (செம்படம்பர் 5) பேசிய டிரம்ப் சொன்னார்.

“இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான வணிகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

“நான் எப்போதும் மோடியுடன் நட்புடன் இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் அவர் தற்போது செய்வது எனக்குப் பிடிக்கவில்லை,” என்றார் டிரம்ப்.

அனைத்துலக உறவுகளில் இத்தகைய கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு என்றும், அவை இரு நாடுகளின் உறவின் வலிமையைக் குறைத்துவிடாது என்றும் டிரம்ப் கூறினார்.

செய்தியாளர் கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், அமெரிக்கா, சீனாவிடம் இந்தியாவை இழந்தது விட்டதாக முன்னர் கூறியதை மறுத்தார்.

இருநாட்டு உறவு முறிந்துவிட்டதாக தாம் நம்பவில்லை என்றார். இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், அதன் காரணமாக இந்தியா மீது 50% வரி விதித்ததாகவும் அவர் சொன்னார்.

தமது ‘ட்ரூத்’ சமூக ஊடகத்தளத்தில் “இந்தியாவையும், ரஷ்யாவையும் அமெரிக்கா சீனாவிடம் இழந்துவிட்டதுபோல் தெரிகிறது” என்று முன்னதாக அவர் பதிவிட்டிருந்தார். ஷாங்காய் உச்சநிலை மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், சீன அதிபர் ஸீ ஜின்பிங் ஆகியோருடன் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டார்.

டிரம்பின் கருத்தை மோடி வரவேற்றுள்ளார்.

இந்தியா - அமெரிக்கா உறவு குறித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் உணர்வுகளையும் நேர்மறையான மதிப்பீட்டையும் ஆழமாகப் பாராட்டுகிறோம். முழுமையாகப் பகிர்ந்து கொள்கிறோம். இரு நாடுகளும் நேர்மறையான, எதிர்கால நோக்குடைய விரிவான, உலகளாவிய மூலோபாய பங்காளித்துவத்தைக் கொண்டுள்ளன என்று தமது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், அதிபர் டிரம்ப்புடன் எப்போதும் வலுவான தனிப்பட்ட உறவை கொண்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

“இந்தியா, அமெரிக்காவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது. இந்த நேரத்தில், அதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது,” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும். அது கட்டுப்படியானதாக உள்ளது,” என்று வெள்ளிக்கிழமை கூறினார். அதனை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் அழுத்தத்தை இந்தியா எதிர்க்கும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்