விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்கு இட்டுச் சென்ற தோசை ஆசை

2 mins read
40a5b78d-b812-4bb5-a4b8-a3e87e4c7ad2
கேட்பாரற்றுக் கிடந்த பை குறித்த தகவலையடுத்து, மோப்ப நாயின் துணையுடன் அதிகாரிகள் பாதுகாப்புச் சோதனையை மேற்கொண்டனர். - படம்: எக்ஸ் / ஏமி பெலான்

பெங்களூரு: காலை நேரத்தில் தோசை சாப்பிடச் சென்றபோது நேர்ந்த குளறுபடியானது பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்கே இட்டுச் சென்றது.

ஜனவரி 14ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஏமி பெலான் என்ற பெண் பயணி.

சந்தைப்படுத்துநராகப் பணிபுரியும் ஏமி, பெங்களூரு விமான நிலையத்தின் முதலாம் முனையத்தில் காலை உணவு அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, அவர் தமது பையையும் உணவுமேசைக்கு அருகிலேயே வைத்திருந்தார்.

அருகில் அமர்ந்திருந்த இன்னொரு பயணி தவறுதலாகத் தமது பையை விட்டுவிட்டு, ஏமியின் பையை எடுத்துச் சென்றுவிட்டார். இதனால், பாதுகாவல் அதிகாரிகள் முழுமையாகச் சோதனை செய்ய வேண்டியதாயிற்று.

“பெங்களூரு விமான நிலைய முதலாம் முனையத்தின் வருகைக் கூடத்தில் தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். என் மேசைக்கு அருகிலேயே என் பையையும் வைத்திருந்தேன். அருகிலேயே வேறு பல மேசைகளும் இருந்தன.

“ஒரு கட்டத்தில், யாரோ ஒருவர் தவறுதலாக அவரது பையை விட்டுவிட்டு, என் பையை எடுத்துச் சென்றுவிட்டார். எழுந்து நின்று பார்த்தபோதுதான் ஏதோ தவறு நடந்திருப்பதை உணர்ந்தேன். என் பையைக் காணவில்லை.

“உடனடியாக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று, அதுபற்றித் தகவல் தெரிவித்தேன். இதற்கிடையே, நான் சாப்பிட்ட இடத்தில் கேட்பாரற்று ஒரு பை இருப்பதாக வேறு யாரோ ஒருவர் பாதுகாவல் குழுவிடம் தகவல் தெரிவித்துவிட்டார்.

“அதனையடுத்து, அவ்விடமே பாதுகாவலர்களால் சுற்றிவளைக்கப்பட்டது. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

“பல அறிவிப்புகளுக்கும் சோதனைகளுக்கும் பிறகு ஒருவழியாக என்னுடைய பையை எடுத்துச் சென்றவரைக் கண்டுபிடித்தோம். அப்போது. அவர் யஷ்வந்த்பூர் சென்றுவிட்டார். தவறுதலாகப் பையை எடுத்துச் சென்றதை ஒத்துக்கொண்டார். இப்போது என் பைக்காகக் காத்திருக்கிறேன். காலை உணவிற்காக இடையில் நின்றதாலேயே இவ்வளவும் நேர்ந்தது,” என்று ஏமி விளக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

பின்னர், தமது பை திரும்பக் கிடைத்துவிட்டதாக கருத்தீட்டுப் (comments) பகுதியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்