பெங்களூரு: இல்லத்தரசிகளின் வீட்டு, அலுவலக வேலை சுமைகளைக் குறைப்பதற்காக பெங்களூரு பொறியாளர் ஒருவர் தோசை இயந்திரத்தைத் தயாரித்துள்ளார்.
தோசைக் கல்லை அடுப்பு மீது வைத்துவிட்டால் தோசையை ரோபோ தானாகச் சுட்டுவிடும் என்று ரெடிட் இணையத்தளத்தில் தனது கருத்தைப் பகிர்ந்துகொண்ட அந்தப் பொறியாளர் கூறியுள்ளார்.
இந்தியாவின் இல்லங்களில் உணவகங்களிலும் ரோபோவின் ஆதிக்கம் பெருகி வருகிறது. தொழில்நுட்பப் பூங்கா என்று அழைக்கப்படும் பெங்களூருவின் ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் இல்லத்தரசிகள் வீடுகளைக் கூட்டி பெருக்கவும், தண்ணீர் வைத்து கழுவி எடுக்கவும் ரோபோக்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இல்லத்தரசிகளின் சமையல் வேலையை எளிமையாக்கும் வகையில் தோசா ரோபோ ஒன்றை பெங்களூருவைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.
“நான் கடந்த சில மாதங்களாகப் பெங்களூருவில் தனிப்பட்ட முறையில் ஒரு ரோபோவை வடிவமைத்துள்ளேன். இந்த ரோபோ தானாகவே அடுப்பில் தோசை கல் வைத்தால் போதும் தானாகவே மாவை ஊற்றி தோசையைச் சுட்டெடுக்கும். எனது குடும்ப உறுப்பினர்கள் தோசை சுட சிரமப்படுவதைப் பார்த்து நான் இந்த தோசை சுடும் ரோபோவை வடிவமைத்தேன்,” என்று அந்தப் பொறியாளர் கூறியுள்ளார்.
தோசை சுடும் ரோபோவுக்குத் ‘திண்டி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘திண்டி’ என்றால் தமிழில் சிற்றுண்டி என்று பொருளாம்.
இதுதொடர்பாக மக்களின் கருத்துகளை அறிய பொறியாளர் விருப்பம் தெரிவித்துள்ளார்.