தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரதட்சணைக் கொடுமை: இரண்டு காவல் அதிகாரிகளிடம் விசாரணை

2 mins read
80a1d458-d3a1-4226-9c15-e78fc82970eb
வரதட்சணை கேட்டு பெண் ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 காவலர்கள் உள்பட நால்வர்மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. - கோப்புப் படம்

மதுரை: வரதட்சணை கேட்டு பெண் ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 காவலர்கள் உள்பட நால்வர்மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

ஆக அண்மையில் அவிநாசி என்ற பகுதியைச் சேர்ந்த ரிதன்யா வரதட்சனைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அத்தகைய சம்பவங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துவருகின்றன.

விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூரில் காவல் ஆய்வாளராகப் பணிபுரியும் செந்தில்குமரன் என்பவரின் மகன் பூபாலன் 2017ஆம் ஆண்டு தேனியைச் சேர்ந்த தங்கப்பிரியாவைத் திருமணம் செய்துகொண்டார்.

மதுரையில் உள்ள அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிகிறார் பூபாலன். அவரது மனைவி தங்கப்பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அவர்களுக்கு 7 வயது மகனும் 5 வயது மகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில், திருமணத்தின்போது ஏற்கெனவே கொடுத்த 60 சவரன் நகைகள், புல்லட் ரக மோட்டார்சைக்கிள் ஆகியவற்றுடன் மீண்டும் பிறந்த வீட்டிலிருந்து பணமும் நகையும் வாங்கி வரும்படி பூபாலன், அவரது தந்தை செந்தில்குமரன், கணவனின் சகோதரி அனிதா ஆகியோர் கொடுமைப்படுத்துவதாகத் தங்கப்பிரியா புகார் அளித்தார்.

கணவரின் குடும்பத்தினரால் தமக்கும் கணவருக்கும் இடையே சண்டை ஏற்படுவதாகவும் தங்கப்பிரியா குறிப்பிட்டார்.

பிறந்த வீட்டிலிருந்து கேட்கும் பணத்தையும் நகையையும் கொடுக்க முடியாது என்று தங்கப்பிரியா உறுதியாகக் கூறியதை அடுத்து கோபமடைந்த பூபாலன் அவரை அறையில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அந்தக் கொடுமைகளால் படுகாயமடைந்த தங்கப்பிரியா தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பூபாலன் குடும்பம்மீது வழக்குப் பதிவுசெய்த அதிகாரிகள், அவர்களை விசாரிக்கின்றனர்.

இதுபோல தொடரும் வரதட்சணைக் கொடுமை சம்பவங்களைத் தடுக்க அரசாங்கமும் சமூக அமைப்புகளும் தீவிரமாகச் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

குறிப்புச் சொற்கள்