ராய்ப்பூர்: டாக்டர் புகழேந்தன் தங்கராஜு, ராய்ப்பூர் நகரில் அமைந்துள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலகின் ஆகச் சிறந்த அறிவியலாளர்களில் முன்னிலை வகிக்கும் இரண்டு விழுக்காட்டினர் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
எய்ம்ஸ் ராய்ப்பூரின் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.
மனித உடலில் மருந்துகளின் தாக்கம், அவற்றின் பாதுகாப்பான பயன்பாடு குறித்த மருத்துவத் துறை (Clinical pharmacology), தொற்றுநோய்கள் ஆகியவை தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுகளுக்காகப் பெயர்பெற்றவர் டாக்டர் புகழேந்தன்.
தொழுநோய், நீரிழிவு போன்றவை குறித்த ஆய்வுகள் இவருக்கு நற்பெயர் ஈட்டித் தந்தன.
ஆய்வுக்கூடப் பணிகள், மருந்துகளை நோயாளிகளிடம் சோதித்தல், பொதுச் சுகாதாரம், நோயாளிகளின் பாதுகாப்புக்குப் பங்களித்தல், புதிய வகை சிகிச்சைத் தீர்வுகள் போன்றவை இவரது ஆய்வுகளில் இடம்பெற்றதாக எய்ம்ஸ் ராய்ப்பூரின் பேச்சாளர் கூறினார்.
டாக்டர் புகழேந்தன் இதுவரை, அனைத்துலகச் சஞ்சிகைகளில் 160க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
மூன்று நூல்களை இயற்றியுள்ளார். 30 நூல்களில் இவரது கட்டுரைகள் அத்தியாயங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
டாக்டர் புகழேந்தன் முன்னணி அறிவியலாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது அவரது தனிப்பட்ட அறிவாற்றலுக்கு மட்டுமன்றி எய்ம்ஸ் ராய்ப்பூர் கழகத்திற்கும் இந்திய மருத்துவச் சமூகத்துக்கும் கிடைத்துள்ள வெற்றி என்று எய்ம்ஸ் ராய்ப்பூர் கழகம் பாராட்டியுள்ளது.
இந்த அங்கீகாரம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த டாக்டர் புகழேந்தன், தமது மதியுரைஞர்கள், கழக இயக்குநர், தமது துறைத் தலைவர், சக மருத்துவர்கள், மாணவர்கள் அனைவரும் அளித்த ஆதரவுமே இதற்குக் காரணம் என்றார்.
மேலும், தமது ஆய்வுப் பணிகளுக்கு ஊக்கசக்தியாக விளங்கிய நோயாளிகளுக்கு இந்தப் புகழை அர்ப்பணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.