புதுடெல்லி: சென்னையில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில், ஒன்பது பேரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
மேலும், குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சொத்துத் தகராறு காரணமாக டாக்டர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக பொன்னுச்சாமி, மேரி புஷ்பம், பேசில், போரிஸ், வில்லியம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், ஏசு ராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம், அரசு சாட்சியாக மாறிய ஐயப்பனைத் தவிர மற்ற ஒன்பது பேரையும் குற்றவாளிகளாக அறிவித்தது.
இவர்களில் பொன்னுசாமி, பேசில் உட்பட ஏழு பேருக்குத் தூக்குத் தண்டனையும் மேரி புஷ்பம், ஏசு ராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
ஆனால், மேல்முறையீட்டின்போது சென்னை உயர் நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
“விசாரணை நீதிமன்றத்தின் சாட்சியங்களை ஆய்வு செய்யாமல் உயர் நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது மிகப்பெரிய தவறு; சட்டத்திற்குப் புறம்பானது,” என இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் சந்திர சர்மா அமர்வு சாடியது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், ஒன்பது பேருக்கும் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உறுதி செய்தனர்.
மேலும், குற்றவாளிகள் உடனடியாகச் சரணடைய உத்தரவிட்ட நீதிபதிகள், பொன்னுசாமி - மேரி புஷ்பம் தம்பதியின் வயது மூப்பைக் கருதி, அவர்களின் தண்டனைக் குறைப்பு குறித்து இரண்டு வாரத்தில் முடிவெடுக்க ஆளுநருக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
அதுவரை அவர்கள் இருவரைத் தவிர மற்ற ஏழு பேரும் உடனடியாகச் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

