‘எல் நினோ’ தாக்கத்தால் தமிழகத்தில் வறட்சி நிலவும்

‘எல் நினோ’ தாக்கத்தால் தமிழகத்தில் வறட்சி நிலவும்

1 mins read
d4d424c7-82f9-4947-8674-15443a58a993
நாடு முழுவதும் 226 மாவட்டங்களில் மழை பொழிவு குறைந்து போவதால் வறட்சி ஏற்படக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். - கோப்புப் படம்: தினமணி

சென்னை: ‘எல் நினோ’ தாக்கத்தால் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் வறட்சி நிலவக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து, குறுகிய காலப் பயிர்களைச் சாகுபடி செய்யுமாறு இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

எல் நினோ பருவ நிலை நிகழ்வானது, குறிப்பிட்ட பகுதிகளில் மழைப்பொழிவு, வெப்ப நிலைகளை மாற்றி கடும் வறட்சியையும் பிற பகுதிகளில் பெரும் மழையையும் உருவாக்கக் கூடியதாகும்.

எல் நினோ பாதிப்பால் இந்தியாவில் நடப்பாண்டு தென் மேற்குப் பருவ மழைப்பொழிவு வழக்கத்தைவிட குறைவாகவே பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்திருந்தது. இதையடுத்து நடப்பாண்டு கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 27 மாநிலங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் 226 மாவட்டங்களில் மழை பொழிவு குறைந்து போவதால் வறட்சி ஏற்படக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அரியலூர், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்களில் எல் நினோவின் தாக்கம் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, வறட்சியான நிலை ஏற்படும் என அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் குறுகிய காலப் பயிர்ச் சாகுபடிக்கு இந்திய மானாவரிப் பயிர் ஆராய்ச்சி நிலையம் பரிந்துரைத்துள்ளது.

இதனிடையே, 226 மாவட்ட வேளாண்மை அதிகாரிகளுடன் இந்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் காணொளி மூலம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) ஆலோசனை மேற்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்