மதுரை: போதை மாத்திரைகளை ‘கூரியர்’, தபால் மூலமாகப் பல்வேறு மாநிலங்களுக்குக் கடத்திய சட்டவிரோதக் கும்பலைத் தமிழகத்தின் தென்மண்டலக் காவல்துறை வெற்றிகரமாகக் கண்டறிந்து முடக்கியுள்ளது.
‘ஆப்பரேஷன் டீப் சோர்ஸ்’ எனப் பெயரிடப்பட்ட அந்த நடவடிக்கையின் மூலம், 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பரந்து விரிந்திருந்த கட்டமைப்பு முடக்கப்பட்டுள்ளது. அனைத்துலக எல்லை கடந்து போதைப்பொருள் நடமாட்டம் இருந்ததும் அம்பலமாகியுள்ளது.
கடந்த ஜூலை 2026ல் தொடங்கப்பட்ட அந்நடவடிக்கையின் முதற்கட்டமாக, தேனி மாவட்டம் கண்டமனூர், திண்டுக்கல், மதுரை ஆகிய பகுதிகளில் ‘கூரியர்’ மூலம் அனுப்பப்பட்ட சந்தேகத்துக்குரிய பொதிகளைப் (பார்சல்) காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அவற்றில் நரம்பு தளர்ச்சி, வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் ‘டேபென்டாடோல்’ (Tapentadol) என்ற போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட தென்மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிதாரி தலைமையிலான தனிப்படை, ‘கூரியர்’ நிறுவனங்களின் முன்பதிவு முகவரிகள், பதிவேடுகளை ஆய்வு செய்தது.
அப்போது, அரியானா மாநிலத்தின் அம்பாலா கேன்ட் பகுதியில் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் 588 போதைப்பொருள் பொதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
போலி முகவரிகள், பெயர்களைப் பயன்படுத்தி இந்தக் கட்டமைப்பை வழிநடத்திவந்த அரியானாவைச் சேர்ந்த மகேந்தர் சிங் பிஷ்ட், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சுனில் குமார் ஆகிய இரு முக்கியமான சூத்திரதாரிகளைத் தனிப்படை காவல்துறையினர் அரியானாவில் வைத்து அண்மையில் கைது செய்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4,400 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தற்போது கைது செய்யப்பட்டவர்களின் வங்கிப் பணப்பரிவர்த்தனைகள், தொலைபேசி உரையாடல்கள் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பிற மாநிலக் காவல்துறையினருடனும் தகவல்கள் பகிரப்பட்டு, போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களையும் பிடிக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
