திருவனந்தபுரம்: தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு உயர் ரக கஞ்சா கடத்தி வந்த மூன்று பெண்கள் கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்தில் பிடிபட்டனர்.
அவர்கள் கடத்தி வந்த கஞ்சாவின் மதிப்பு ரூ.40 கோடி என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்த மூவரில் ஒருவர் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“மற்ற இருவரும் சென்னை, கோவையைச் சேர்ந்தவர்கள். கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையம் மூலம் உயர் ரக கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறைக்கு தகவல் வந்தது.
“இதையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது 34 கிலோ உயர் ரக கஞ்சா சிக்கியது. மேலும் 15 கிலோ ‘மெத்தம்பெட்டமை’னும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ.40 கோடி இருக்கும்.
“தாய்லாந்தில் இருந்து ஏர் ஏசியாவின் ஏகே-33 விமானத்தில் இதைக் கடத்தி வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது,” என அதிகாரிகள் கூறினர்.
இவர்கள் யாருக்காக போதைப் பொருள்களைக் கடத்தி வந்தனர் என்பது குறித்து கைதான பெண்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.