ஜெய்ப்பூர்: ரயில் தண்டவாளத்தில் தமது காரை ஓட்டிச் சென்ற ஆடவரைக் காவல்துறை கைதுசெய்தது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூரில் திங்கட்கிழமையன்று (நவம்பர் 11) இச்சம்பவம் நிகழ்ந்தது.
அந்த ஆடவர் போதையில் இருந்ததாகவும் குறுங்காணொளி எடுப்பதற்காக அவர் தமது காரைத் தண்டவாளத்தில் ஓட்டிச் சென்றதாகவும் கூறப்பட்டது.
அவரது கார் தண்டவாளத்தில் இருந்தபோது, அதே தடத்தில் சரக்கு ரயில் ஒன்றும் வந்தது. அதையடுத்து, தமது காரை அங்கிருந்து நகர்த்த அந்த ஆடவர் முற்பட்டார். ஆனால், அது தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டது.
நல்லவேளையாக, தண்டவாளத்தில் கார் நிற்பதைக் கண்ட சரக்கு ரயில் ஓட்டுநர், சரியான நேரத்தில் சற்று தள்ளி ரயிலை நிறுத்திவிட்டதால் விபத்து நேர்வது தடுக்கப்பட்டது. இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அதில், அந்த ஆடவர் தண்டவாளத்திலிருந்து தமது காரை விடுவிக்க முயல்வதும் அதற்கு அருகே காவல்துறையினர் உள்ளிட்ட சிலர் நின்றுகொண்டிருப்பதும் தெரிகிறது.
சிலரின் துணையுடன் அந்த ஆடவர் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட தமது காரை விடுவிக்க முடிந்ததாகவும் பின்னர் பின்புறமாகவே 20-30 மீட்டர் தொலைவிற்குக் காரை ஓட்டி, அருகிலிருந்த சாலைக்குச் சென்று அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்போது அந்த ஆடவரின் கார் மூவர்மீது மோதி காயம் விளைவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
காவல்துறையினர் விரட்டிச் சென்று, அந்த ஆடவரைக் கைதுசெய்தனர். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியாவில் ரயில் தண்டவாளத்தில் இருந்தபடி குறுங்காணொளி எடுக்க முயன்றது இது முதன்முறையன்று. அவ்வாறு காணொளி எடுத்தபோது, ரயில் மோதி பலர் மாண்ட, காயமுற்ற விபத்துகளும் பதிவாகியுள்ளன.