புதுடில்லி: அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாதி தஹாவூர் ராணா, துபாயில் வசிக்கும் முக்கிய புள்ளிகளுடன் தமக்கு இருக்கும் தொடர்பு குறித்து என்ஐஏ விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தஹாவூர் ராணா.
கடந்த 2008 நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் மஹாராஷ்டிராவின் மும்பைக்குள் புகுந்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தினர்.
ரயில் நிலையம், இரண்டு ஹோட்டல்கள், யூதர்கள் நிலையத்தில் புகுந்து அவர்கள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர்.
இந்த நாச வேலைக்கு மூளையாக செயல்பட்ட, வட அமெரிக்க நாடான கனடா குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசித்து வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த தஹாவூர் ஹுசைன் ராணா அமெரிக்காவில் 2011ல் கைது செய்யப்பட்டார்.
அவரை, இந்தியா அழைத்து வர இந்திய வெளியுறவுத் துறை தீவிர முயற்சி மேற்கொண்டது.
நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின் இம்மாதம் 9ஆம் தேதி என்ஐஏ (தேசிய புலனாய்வு முகவை) அதிகாரிகளிடம் ராணா ஒப்படைக்கப்பட்டார்.
பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை 18 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து டெல்லியில் உள்ள என்ஐஏ தலைமை அலுவலகத்தில் உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ள ராணாவிடம், அதிகாரிகள் விசாரணை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
அவரிடம், மும்பை தாக்குதலை நடத்திய பாகிஸ்தானைத் தளமாக கொண்டு இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் இருக்கும் தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் விசாரணையின் விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் வெளியிடவில்லை.