கோல்கத்தா: இந்தியாவில் நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள துர்கை வழிபாட்டுப் பந்தல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பஹராம்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் உள்ள அசுரன் சிலை, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைப்போல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக அதிபர் டிரம்ப் கடுமையான வரி விதித்தது, எச்-1பி விசா கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியது ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு வடிவமைத்ததாக அந்த வழிபாட்டுக் குழுவின் நிர்வாகி தெரிவித்தார்.
உள்ளூர்க் கலைஞர் அசிம் பால் என்பவர் அந்தச் சிலையை உருவாக்கியதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
அதிபர் டிரம்ப்பின் தோற்றத்துடன் உள்ள சிலையின் படங்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளன.