மும்பை: அரசு மருத்துவமனையில் அதிகாலையில் நிகழ்ந்த தீவிபத்தில் மூன்று பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு அமராவதி மாவட்டத்தில் இயங்கிவரும் மகளிர் அரசு மருத்துவமனையில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) அதிகாலையில் ஏற்பட்ட திடீர்த் தீவிபத்தில், அம்மூன்று குழந்தைகளும் தீவிர சிகிச்சைப் பிரிவில் பரவிய தீயால் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை அதிகாலை சற்றேறக்குறைய 3.15 மணியளவில், மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் செயல்பட்டு வந்த பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த உயிர்வாயு விநியோகிக்கும் செயற்கை சுவாசக்கருவி (வென்டிலேட்டர்) ஒன்றில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அந்தத் தீப்பொறி, அடுத்த சில நிமிடங்களில் மற்ற கருவிகளுக்கும் பரவியதை அடுத்து, அடர்ந்த புகைமூட்டம் ஏற்பட்டது என்றும் இதனால் அப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 39 குழந்தைகள் உயிருக்குப் போராடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகையைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், தாதியர், மருத்துவமனைப் பணியாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு, பெரும்பாலான குழந்தைகளைப் போராடி மீட்டனர்.
மூன்று குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்ட நிலையில், காயமடைந்த ஆறு குழந்தைகள் உடனடியாக அருகிலுள்ள உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மேலதிகச் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். காவல்துணை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


