கோல்கத்தாவில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்

கோல்கத்தாவில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்

படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

27 Feb 2026 - 6:58 pm

1 mins read

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத் தலைநகரான கோல்கத்தாவில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் பீதிக்குள்ளாகினர்.

கட்டடங்கள் குலுங்கியதாகவும் ஓரிரு நொடிகளுக்கு நிலநடுக்கம் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள பரபரப்பான நகரங்களில் கோல்கத்தாவும் ஒன்று. வெள்ளிக்கிழமை மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 புள்ளிகளாகப் பதிவானது.

நிலநடுக்கத்தின்போது வீடுகளில் இருந்த பொருள்கள் உருண்டு விழுந்தன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

இதேபோல் அலுவலக மேசைகளில் இருந்த பொருள்கள் திடீரெனக் கீழே விழுந்ததாலும் கட்டடங்கள் குலுங்கியதாலும் பதற்றம் அடைந்த ஊழியர்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறினர்.

முன்னதாக, பங்ளாதேஷில் வெள்ளிக்கிழமை மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் எதிரொலியாகவே, கோல்கத்தாவில் பூமி அதிர்வு ஏற்பட்டிருக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மியன்மாரில் 5.9 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போதும் கோல்கத்தாவில் பரவலாக நில அதிர்வுகள் உணரப்பட்டன.

அடுத்தடுத்த நிலநடுக்க அனுபவங்களால் கோல்கத்தா நகரவாசிகள் பீதியில் உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்