உத்தராகண்ட்டில் நிலநடுக்கம், டெல்லியில் நில அதிர்வு

உத்தராகண்ட்டில் நிலநடுக்கம், டெல்லியில் நில அதிர்வு

படம்: ஏஎன்ஐ

07 Oct 2026 - 7:43 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் சமோலி பகுதியை மையமாகக் கொண்டு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.9ஆகப் பதிவாகியுள்ளது.

அந்த நிலநடுக்கம் நாட்டின் தலைநகரான டெல்லி, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், செவ்வாய்க்கிழமை இரவு ஏறக்குறைய 10.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் பூமிக்கு அடியில் 13 கிலோமீட்டர் ஆழத்தில் அதன் மையம் அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலநடுக்க அதிர்வுகளை உணர்ந்ததும் டெல்லி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். கட்டடங்கள் லேசாக அசைந்ததாகவும் வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் ஆடியதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், திடீர் நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

முன்னதாக, அதே நாளில் அசாம் மாநிலத்தின் நகோன் பகுதியிலும் 4.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்