முரசுக்களம்: அணிசேராக் கொள்கையில் இந்தியா உறுதி

3 mins read
3d913e15-1992-448d-9a5a-833ebc816f7e
தீவிர வேற்றுமைகளுக்கும் பதற்றங்களுக்கும் இடையிலும் உலக அரங்கில் இந்தியா, சீனா, ரஷ்யா என்ற மூன்று நாடுகளின் தலைவர்கள் சீனாவின் தியான்ஜின் நகரில் கடந்த வார இறுதியில் கூடி, விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். - படம்: செயற்கை நுண்ணறிவு

மேற்கத்திய வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு எதிராக ஓர் அணி ஒற்றுமையுடன் திகழ்வதை தியான்ஜின் உச்சநிலைக் கூட்டம் காட்ட முற்பட்டது. 

உண்மை நிலவரமோ சிக்கல்கள் நிறைந்தது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) என்ற அந்த உச்சநிலைக் கூட்டத்தில் எல்லாத் தரப்புகளாலும் பேச்சுவார்த்தைகள் மிகுந்த கவனத்துடன் கையாளப்பட்டன.

தீவிர வேற்றுமைகளுக்கும் பதற்றங்களுக்கும் இடையிலும் உலக அரங்கில் இந்தியா, சீனா, ரஷ்யா என்ற மூன்று நாடுகளின் தலைவர்கள் சீனாவின் தியான்ஜின் நகரில் கடந்த வார இறுதியில் கூடி, விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏழு ஆண்டுகளில் முக்கியமாக மேற்கொண்டுள்ள பயணம், பதற்றத்தைத் தணிக்க திட்டமிட்டு எடுத்துவைத்த முதல் அடியாக அமைந்தது. 

உயிரிழப்பை ஏற்படுத்திய நீண்டநாள் எல்லைப் பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும், பொருளியல் ஒத்துழைப்பிலும் பாதுகாப்பிலும் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தின.

அமெரிக்க டாலரைப் பொருட்படுத்தாத நிதியியல் கட்டமைப்புகளையும் மேம்பாட்டு வங்கியையும் அமைப்பதில் சீனாவும் ரஷ்யாவும் ஆர்வம் காட்டுகின்றன.

உத்திபூர்வ தன்னாட்சியாகத் திகழ இந்தியா கொண்டுள்ள விருப்பத்துடன் அத்திட்டம் ஒத்துப்போகிறது. 

இந்தியாவின் எல்லை வரைமுறைகளையும் உள்நாட்டுப் பாதுகாப்பையும் பிற நாடுகள் மதிப்பதால் ஏற்படும் இருபக்க பொருளியல் நன்மைகளை திரு மோடி, மாநாட்டின்போது விளக்கினார்.

பாதுகாப்பு, இணைப்பு, வாய்ப்பு என்ற மூன்று ‘பு’க்களை மும்முனைத் திட்டமாக முன்வைத்தார் திரு மோடி.

அனைத்துலக வடக்கு - தெற்கு வணிகத்தடம், சாபார் துறைமுகம் போன்ற திட்டங்களை, அனைத்துலக வரையறைகளை மதிக்கும் இந்தியாவின் சொந்தத் திட்டங்களாகத் திரு மோடி காண்பித்தார்.

மேலும், பண்பாட்டுப் பரிமாற்றம், மின்னிலக்க ஒத்துழைப்பு, உள்நாட்டுச் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடன் உலக நாடுகள் கைகோக்கும்படியும் திரு மோடி கூட்டத்தின்போது அழைப்பு விடுத்தார்.

பாகிஸ்தானுக்கு சீனா தொடர்ந்து நல்கும் ஆதரவு, இந்தியப் பெருங்கடல் பகுதியிலுள்ள துறைமுகங்களில்  சீனா கொண்டுள்ள ஈடுபாடு, பதற்றத்தை அதிகரிக்கும் காரணிகள். என்றாலும், எந்த அணி பக்கமும் சாயாமல் நாட்டு நலனில் தற்போது இந்தியா காட்டும் கவனம், சிங்கப்பூரின் நெடுநாள் அனைத்துலக அரசதந்திரக் கொள்கைகளுக்கு ஒப்பானது.

ரஷ்யாவிடம் ஆயுதங்களையும் எண்ணெய்யையும் பெறும் இந்தியா, அந்நாட்டுடன் தனது அணுக்கத்தை விடுவதற்கான எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தவில்லை. உக்ரேனிய போரின் முடிவுக்காக உலகமே காத்திருக்கிறது என்று இந்தியா, மாநாட்டின்போது குறிப்பிட்டது.

போர் குறித்து சீனா நேரடியாகப் பேசவில்லை என்றாலும் பனிப்போர் காலத்தில் நிலவிய எண்ணப்போக்கை அமெரிக்கா தொடர்வதாகச் சாடியது. சீனாவும் ரஷ்யாவும் இந்தத் தருணத்தில் தங்கள் அணுக்கத்தை ஆழப்படுத்தத் தொடங்கிய நேரத்தில், இந்தியா மிதமான போக்கைக் கையாள்கிறது.

உலக அரசியல் கூட்டமைப்பில் மாற்றத்திற்கான இந்த  பேச்சுவார்த்தைகளிடையே சிங்கப்பூர், தன் பங்கிற்கு முக்கிய அரசதந்திரப் பயணங்கள் இரண்டை தற்போது மேற்கொண்டுள்ளது.

பிரதமர் லாரன்ஸ் வோங் செப்டம்பர் 2 முதல் 4 வரை இந்தியப் பயணம் மேற்கொள்ளும் நேரத்தில், துணைப் பிரதமர் கான் கிம் யோங்கின் சீனப் பயணம் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை நீடிக்கிறது. 

பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் உறுதிசெய்யும் சிங்கப்பூரின் நடைமுறை சார்ந்த வெளியுறவுக் கொள்கையை எடுத்துக்காட்டும் வகையில் இவ்விரு பயணங்களும் அமைந்துள்ளன.

பாகுபாட்டுடன் நடந்துகொள்ளும்படியான வற்புறுத்தல்களுக்கு இணங்காது, எல்லா உலக வல்லரசுகளுடனும் நேர்மையான, நட்பார்ந்த முறையில் நடந்துகொள்ளும் சிங்கப்பூர், உலக அரங்கில் தனது முக்கியத்துவத்தையும் பொருளியல் நலனையும் தொடர்ந்து தக்க வைக்கிறது.

சிங்கப்பூரைப் போன்றதொரு பலதரப்பு ஒத்துழைப்பை இந்தியாவும் பொருளியல் அடிப்படையில் செயல்படுத்த முயல்கிறது. எந்த ஒரு வல்லரசின் ஆதிக்கமின்றி, பொருளியல் நன்மையைக் கருத்தில்கொண்டு பல நாடுகளுடன் இணக்கப் போக்கைக் கையாள்வது, இந்தியாவின் அணிசேரா இயக்கத்தின் தற்போதைய மறுவடிவமாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்